முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய தமிழர்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த செனுரான் முத்துசாமி அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.
செனுரான் முத்துசாமி (நன்றி: டிவிட்டர் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்)
செனுரான் முத்துசாமி (நன்றி: டிவிட்டர் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்)


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த செனுரான் முத்துசாமி அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இன்று விசாகபட்டினத்தில் தொடங்கியது. இதில், தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அறிமுக வீரராக பேட்டிங் ஆல்-ரௌண்டர் செனுரான் முத்துசாமி களமிறங்கினார். முத்துசாமி என்ற பெயரில் இருந்தே தெரிந்துகொள்ளலாம் இவர் தமிழர் என்று. 

முத்துசாமியின் குடும்பத்தினர் சில தலைமுறைக்கு முன்னதாகவே தென் ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்துவிட்டதால், அவர் தென் ஆப்பிரிக்காவில்தான் பிறந்து வளர்ந்தார்.

இந்நிலையில், முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்குவதற்கு முன் அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், 

"எங்களது தொடக்கம் சென்னையில் இருந்துதான். இன்னும் எனக்கு நாகப்பட்டினத்தில் சொந்தங்கள் இருக்கிறது. பல தலைமுறைகள் கடந்தபோதிலும், இந்தியர் என்கிற தொடர்பு இருந்துகொண்டுதான் உள்ளது. எங்களது கலாச்சாரம் இந்திய கலாச்சாரம்தான்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக நான் தேர்வானபோது எனது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதுவும் எனது அறிமுக ஆட்டம் இந்தியாவுக்கு எதிரானது என்பது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்தது. 

தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நிறைய இந்தியர்கள் வசிக்கிறார்கள். அங்கு நான் யோகா செய்வேன். நாங்கள் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். எனது குடும்பத்தினர் சிலர் தமிழிலேகூட பேசுவார்கள். துரதிருஷ்டவசமாக, எனக்கு தமிழ் தெரியாது. தற்போதுதான் அதைப் படிக்க முயற்சி செய்து வருகிறேன்.

இங்கு வெப்பத்தை கையாள வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, ஆட்டத்தில் வெற்றி பெற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும். அதேசமயம், தொடர்ச்சியாக சிறப்பாகவும் பந்துவீச வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் இது முற்றிலும் நேர்மாறானது. 4-வது இன்னிங்ஸில்தான் நாங்கள் ஆட்டத்திலேயே பங்கெடுப்போம்.

பேட்டிங்கில் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். இந்திய ஆடுகளங்களில் பந்துகள் அதிகளவில் பவுன்ஸ் ஆகாது. அதற்கேற்றார்போல் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். ரிவர்ஸ் ஸ்விங்கையும் எதிர்கொள்ள வேண்டும். இந்த சமயம் நான் நிச்சயம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

ஹெராத்தும், சங்கக்காராவும் என்னை ஈர்த்துள்ளனர். சங்கக்காரா அவருடைய பேட்டிங்குக்காகவும், கிரிக்கெட் வாழ்க்கைக்காகவும் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டும் நிறைய பிடிக்கும். அவரை எப்போதுமே கவனித்துக்கொண்டே இருப்பேன். 

இவர்கள் தவிர ஷாகிப் அல் ஹசன், மொயீன் அலி, பிஷன் பேடி ஆகியோரும் ஈர்த்துள்ளனர். ஆனால், ஹெராத்தும், சங்கக்காராவும் நிறைய பிடிக்கும். 

இதுதவிர நிறைய டி20 கிரிக்கெட் விளையாடுவதும் எனக்கு பிடிக்கும்" என்றார்.

முதல்தர கிரிக்கெட்டில் அவர் 3403 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 32.72 ஆகும். அதேசமயம், பந்துவீச்சு சராசரி 28.65 உடன் 129 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com