292/5: இந்திய அணியின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி, தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது.
292/5: இந்திய அணியின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி, தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் புதன்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 502 ரன்களுடன் டிக்ளோ் செய்தது. 2-ம் நாள் முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பில் 39 ரன்கள் எடுத்தது.

இன்று தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. அடிக்கடி பவுண்டரிகள் அடித்து நல்ல ஆரம்பத்துடன் இன்றைய தினத்தைத் தொடங்கினார்கள். ஆனால், இஷாந்த் சர்மா சிறப்பாக வீசி, பவுமாவை எல்பிடபிள்யூ முறையில் 18 ரன்களில் வீழ்த்தினார். இதன்பிறகு 6-ம் நிலை வீரராகக் களமிறங்கினார் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ். எல்கர் - டு பிளெஸ்ஸிஸ் ஆகிய இருவரும் சுழற்பந்துவீச்சை கவனமாகக் கையாண்டார்கள். நேற்று மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் எளிதாக மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என்கிற இந்திய வீரர்களின் எண்ணத்தை அடியோடு மாற்றினார்கள். ஜடேஜா வீசிய 44-வது ஓவரில் எல்கர் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்களை எடுத்தார். அவர் 112 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மதிய உணவு இடைவேளை வரை இருவரையும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இருவருடைய பேட்டிங்கும் இந்த டெஸ்டுக்குப் புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. இந்திய அணி எளிதாக வெல்லும் என்கிற கணிப்பை மாற்றியுள்ளது.

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. எல்கர் 76, டு பிளெஸ்ஸிஸ் 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, 91 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் தென் ஆப்பிரிக்க கேப்டன். மிக அருமையாகச் சென்றுகொண்டிருந்த இந்தக் கூட்டணியை உடைத்தார் அஸ்வின். தவறான ஷாட்டினால் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து 55 ரன்களில் வெளியேறினார் டு பிளெஸ்ஸிஸ். இதன்பிறகு அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடித்து, 175 பந்துகளில் அருமையான சதத்தைப் பூர்த்தி செய்தார் எல்கர். இவருடைய பேட்டிங்கும் மன உறுதியும் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்த டெஸ்டில் புதிய வெளிச்சத்தை அளித்துள்ளது. 2016-ல் மொயீன் அலி இந்தியாவில் சதமடித்தார். அதன்பிறகு அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சைச் சமாளித்து சதமடித்த இடக்கை பேட்ஸ்மேன், எல்கர் மட்டுமே. எல்கர் பெரும்பாலான ரன்களை லெக் சைடில் எடுத்து இந்திய அணியின் பந்துவீச்சுத் திட்டத்தை முறியடித்தார். 

திடீரென நான்கு பந்துகளில் (2 அஸ்வின், 2 ஜடேஜா) 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளை அடித்தார் டி காக். ஒரேடியாகச் சுழற்பந்துவீச்சுக்கு அடிபணியாமல் தேவைப்படும் நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிற தென் ஆப்பிரிக்க வீரர்களின் மனநிலையை இது உணர்த்தியது. தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகரும் மும்பை அணியின் முன்னாள் வீரருமான அமோல் மஸும்தாரின் பங்களிப்பும் இதில் அதிகம் இருக்கலாம்.

களமிறங்கியது முதல் பிரமாதமான ஸ்டிரோக்குகளை வெளிப்படுத்திய டி காக் 79 பந்துகளில் அரை சதமெடுத்தார். தேநீர் இடைவேளை வரை எல்கர் - டி காக் கூட்டணியை எவ்வளவு முயன்றும் பிரிக்க முடியாமல் போனது. இந்தக் கூட்டணி, 29.3 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தது.

3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது, தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்தது. எல்கர் 133, டி காக் 69 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தென் ஆப்பிரிக்க அணி இன்று விளையாடிய இரு பகுதிகளிலும் சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் இந்த டெஸ்டை இந்திய அணி வெல்லவேண்டும் என்றால் இன்னும் கடுமையாகப் போராட வேண்டும் என்கிற நிலைமை தான் தற்போது உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com