‘தி ஹண்ட்ரெட்’ போட்டியில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஹர்பஜன் சிங்: அனுமதி மறுத்த பிசிசிஐ!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரெட் போட்டியில் பங்குபெற ஹர்பஜன் சிங் விருப்பம் தெரிவித்தபோதும் அதற்கான அனுமதியை வழங்க...
‘தி ஹண்ட்ரெட்’ போட்டியில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஹர்பஜன் சிங்: அனுமதி மறுத்த பிசிசிஐ!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரெட் போட்டியில் பங்குபெற ஹர்பஜன் சிங் விருப்பம் தெரிவித்தபோதும் அதற்கான அனுமதியை வழங்க பிசிசிஐ மறுத்துள்ளது. 

ஐபிஎல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் அறிமுகம் செய்துள்ளது. இந்த 100 பந்துகள் ஆட்டத்தில் வழக்கமான 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும். இதனால் டி20 போட்டிகளான ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 2003-ல் டிவெண்டி20 கப் என்கிற டி20 போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது. அதன் அடுத்தக்கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டி அடுத்த வருடம் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து பல்வேறு விதமான கருத்துகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் தி ஹண்ட்ரெட் போட்டியின் வரைவுப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக 2016 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ளார். தி ஹண்ட்ரெட் போட்டியில் தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்டுகளை (1 லட்சத்து 24 ஆயிரம் டாலர்கள்) நிர்ணயித்துள்ளார் ஹர்பஜன். அக்டோபர் 20 அன்று லண்டனில் இறுதி வரைவுப் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு அணியிலும் 3 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம்.

எனினும் 39 வயது ஹர்பஜன் சிங் அப்போட்டியில் இடம்பெற வேண்டுமென்றால் பிசிசிஐயின் அனுமதியைப் பெறவேண்டும். பிசிசிஐ விதிமுறைகளின்படி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். இதனால் ஹர்பஜன் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற யுவ்ராஜ் சிங், குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாடினார். 

ஆனால் தற்போதைய நிலைமையில் ஹர்பஜன் சிங்கால் வரைவுப் பட்டியலில் இடம்பெற முடியாது என பிசிசிஐ கூறியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது: வரைவுப் பட்டியலில் அவர் பெயர் எப்படி இடம்பெறும்? அவர் இப்போதும் இந்திய அணி வீரராகவே உள்ளார். பிசிசிஐயின் அனுமதியில்லாமல் அவரால் வரைவுப் பட்டியலில் இடம்பெறமுடியாது. வெளிநாட்டுப் போட்டிகளில் பங்குபெற ஓய்வுக்குப் பிறகும் பிசிசிஐயிடம் வீரர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com