இந்திய அணி சரியான நேரத்தில்தான் டிக்ளேர் செய்ததா?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸை இந்திய அணி சரியான நேரத்தில்தான் டிக்ளேர் செய்தது என்று சேத்தேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். 
இந்திய அணி சரியான நேரத்தில்தான் டிக்ளேர் செய்ததா?


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸை இந்திய அணி சரியான நேரத்தில்தான் டிக்ளேர் செய்தது என்று சேத்தேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 67 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட்டை இழந்து 11 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க் அணி 9 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்தது. இதனால், இந்திய அணி சில ஓவர்களுக்கு முன்பாக டிக்ளேர் செய்திருக்கலாம் என்கிற வாதமும் எழுந்தது.

இந்நிலையில், இந்திய வீரர் சேத்தேஷ்வர் புஜாராவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சரியான நேரத்தில்தான் டிக்ளேர் செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், 

"சரியான நேரத்தில்தான் டிக்ளேர் செய்துள்ளோம். 4-வது நாள் ஆட்டத்தில் நிறைய ஓவர்கள் வீச நாங்கள் விரும்பவில்லை. 5-வது நாள் ஆட்ட தொடக்கத்தில், பந்து மென்மையாக இருக்கக் கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பந்து மென்மையாக மாறிவிட்டால், அதன்பிறகு பேட்டிங் செய்வது எளிதாகிவிடும். முக்கிய விக்கெட்டான டீன் எல்கர் விக்கெட்டை கைப்பற்றியுள்ளோம். அதனால், ஒரு அணியாக இன்றைய செயல்பாடுகள் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் மிக முக்கியமான பாட்னர்ஷிப்பாக ரோஹித் - புஜாரா அமைந்தது. இந்த பாட்னர்ஷிப் 2-வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது. இதில், புஜாரா மட்டும் 81 ரன்கள் குவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com