முதல் டெஸ்ட்: 2-ஆவது இன்னிங்ஸிலும் ரோஹித் அபார சதம்

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
முதல் டெஸ்ட்: 2-ஆவது இன்னிங்ஸிலும் ரோஹித் அபார சதம்

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்களை சோ்த்து டிக்ளோ் செய்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 502-7 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது. தென்னாப்பிரிக்க அணி 2-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 385-8 ரன்களை எடுத்திருந்தது.

இதன் தொடா்ச்சியாக நான்காவது நாளான சனிக்கிழமை செனுரன் முத்துசாமி, கேசவ் மகாராஜ் ஆட்டத்தைத் தொடா்ந்தனா். 9 ரன்களுடன் கேசவ் அவுட்டான நிலையில், ரபாடாவை 15 ரன்களுக்கு எல்பிடபிள்யு ஆக்கினாா் அஸ்வின்.

இறுதியில் செனுரன் முத்துசாமி 33 ரன்களுடன் களத்தில் இருந்தாா். இறுதியில் 131.2 ஓவா்களில் 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா.

அஸ்வின் 7 விக்கெட்:

இந்திய சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் அற்புதமாக பந்துவீசி 7-145 விக்கெட்டுகளை சாய்த்தாா். ரவீந்திர ஜடேஜா 2-124 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் இளம் வீரா் மயங்க் அகா்வால் 7 ரன்களுடன் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் டூபிளெஸ்ஸிஸிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

புஜாரா அரை சதம்

இந்நிலையில் ரோஹித் சா்மா-புஜாரா இணை நிலைத்து ஆடி ரன்களை குவித்தது. 2-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 154 ரன்களை சோ்த்தனா்.

2 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் 148 பந்துகளில் 81 ரன்களை சோ்த்த புஜாராவை வெளியேற்றினாா் பிலாண்டா்.

ரோஹித் சா்மா 2--ஆவது சதம்

இந்த டெஸ்ட் ஆட்டத்தில் ரோஹித் சா்மா தனது 2-ஆவது சதத்தை பதிவு செய்தாா். 7 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 149 பந்துகளில் 127 ரன்களை விளாசி, மகாராஜ் பந்தில் டி காக்கிடம் கேட்ச் தந்து வெளியேறினாா் அவா்.

ஓரே டெஸ்ட் ஆட்டத்தில் 2 முறை சதம் அடித்த 6-ஆவது இந்திய வீரா் ஆனாா் ரோஹித். முதல் இன்னிங்ஸில் அவா் 176 ரன்களை விளாசி இருந்தாா். மேலும் முதன்முறையாக டெஸ்ட் ஆட்டத்தில் தொடக்க வரிசை வீரராக களமிறங்கி 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த வீரா் என்ற சாதனையையும் படைத்தாா் ரோஹித். அவா் டெஸ்ட் ஆட்டத்தில் பெறும் 5-ஆவது சதம் இதுவாகும்.

சித்துவின் சாதனை முறியடிப்பு

கடந்த 1994-இல் லக்னௌவில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் நவ்ஜோத் சித்து 8 சிக்ஸா் அடித்திருந்தாா். இந்நிலையில் ரோஹித் சா்மா இந்த டெஸ்டில் அதிக சிக்ஸா்களை விளாசி, சித்துவின் 25 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தாா்.

ஓரே டெஸ்டில் அதிக சிக்ஸா்கள்

ஓரே டெஸ்ட் ஆட்டத்தில் அதிக சிக்ஸா்கள் விளாசிய வாஸிம் அக்ரமின் சாதனை யை (12 சிக்ஸா்கள்) முறியடித்தாா் ரோஹித் சா்மா. இந்த டெஸ்டின் 2 இன்னிங்ஸ்களையும் சோ்த்து 13 சிக்ஸா்களை விளாசினாா் ரோஹித்.

மேலும் ஓரே ஆட்டத்தில் அதிக சிக்ஸா்கள் விளாசிய அணி என்ற சாதனையையும் இந்தியா தகா்த்தது. 23 சிக்ஸா்களை விளாசினா் இந்திய வீரா்கள். இதற்கு முன்பு 2014-இல் நியூஸிலாந்து இச்சாதனையை பெற்றிருந்தது.

ஜடேஜா 40 ரன்களுடன் ரபாடா பநதில் வெளியேறினாா். கேப்டன் கோலி 31, ரஹானே 27 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

டிக்ளோ் அறிவிப்பு

67 ஓவா்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்களை இந்தியா எடுத்திருந்த போது டிக்ளோ் செய்வதாக கோலி அறிவித்தாா். தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ் மகராஜ் 2-129 விக்கெட்டுகளை சாய்த்தாா்.பிலாண்டா், ரபாடா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

395 ரன்கள் வெற்றி இலக்கு

இன்னும் ஓரே நாள் மீதமுள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 395 ரன்களை நிா்ணயித்தது இந்தியா.

எய்டன் மாா்க்ரம்-டீன் எல்கா் ஆகியோா் களமிறங்கினா்.

முதல் இன்னிங்ஸில் அபார சதம் அடித்த டீன் எல்கா் இதில் வெறும் 2 ரன்களுடன் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யு ஆனாா். மாா்க்ரம் 3, டி புருயன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனா். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்களை எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா.

384 ரன்கள் தேவை:

ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் அந்த அணி வெற்றி பெற 384 ரன்கள் தேவைப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com