அரைசதம் அடித்த அறிமுக நாயகி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபாரம்!

தென் ஆப்பிரிக்க மகளிருக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி


தென் ஆப்பிரிக்க மகளிருக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க மகளிர், இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் இன்று (புதன்கிழமை) வதோதராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி, இந்திய மகளிரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

இதனால், அந்த அணி 45.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மாரிஸன் கேப் மட்டும் அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் ஜுலான் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே, எக்தா பீஷ்த், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

165 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. காயம் காரணமாக விலகிய முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தானாவுக்குப் பதிலாக பிரியா புனியா அறிமுக வீராங்கனையாக களமிறங்கினார். இவருடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றொரு தொடக்க வீராங்கனையாக களமிறங்கினார்.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்து 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பூனம் ரௌத் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, பிரியா புனியாவுடன் கேப்டன் மிதாலி ராஜ் இணைந்தார். இருவரும் மேற்கொண்டு விழாமல் கவனித்துக் கொண்டு வெற்றி இலக்கை அடைந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த புனியா மற்றும் மிதாலி முறையே 75 ரன்கள் மற்றும் 11 ரன்கள் எடுத்தனர். ஆட்டநாயகி விருதை பிரியா புனியா தட்டிச் சென்றார்.    

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com