அடித்த 7-இல் இதுதான் ஸ்பெஷல்: மனம் திறக்கும் இரட்டைச் சத நாயகன்!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அடித்ததே சிறந்த இரட்டைச் சதம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். 
அடித்த 7-இல் இதுதான் ஸ்பெஷல்: மனம் திறக்கும் இரட்டைச் சத நாயகன்!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அடித்ததே சிறந்த இரட்டைச் சதம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் புணேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தார். இது விராட் கோலியின் 7-வது இரட்டைச் சதமாகும். இந்நிலையில், அடித்த 7 இரட்டைச் சதங்களுள் சிறந்த இரட்டைச் சதங்கள் குறித்து அவர் பிசிசிஐ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

"அனைத்து இரட்டைச் சதங்களும் நல்ல உணர்வைத் தரும். ஆனால், இப்படி கேட்டால் ஆண்டிகுவாவில் அடித்தது மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் அடித்தது சிறந்த இரட்டைச் சதங்களாகும். ஒன்று இந்தியாவுக்கு வெளியே அடித்தது. மற்றொன்று சவாலான சூழலில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்தது. நிறைய இரட்டைச் சதங்கள் அடிப்பதற்கு நன்றாக இருக்கும். 

தொடக்கத்தில் அதிக ரன்கள் எடுக்க சிரமம்ப்பட்டேன். ஆனால் கேப்டன் ஆன பிறகு, அனைத்து நேரத்திலும் அணியைக் குறித்தே சிந்திக்க நேரிடும். நம்மைப் பற்றி சிந்திக்க முடியாது. இந்த நடைமுறையில், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பேட்டிங் செய்யலாம். அதனால், இந்த மனநிலைதான் நீண்ட நாட்களாக இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை 600 ரன்கள் எடுக்க வேண்டும், அதன்பிறகு இன்றைக்குள் தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் திட்டமாக இருந்தது. ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்து, என்னை ரிஸ்க் எடுக்கவிடாமல் பார்த்துக் கொண்டார். இந்த பாட்னர்ஷிப் இந்திய அணிக்கு சாதகமான சூழலை அமைத்துத் தந்தது. நாங்கள் 15 ஓவர்கள் வீசி, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளோம்" என்றார்.

விராட் கோலி தனது முதல் இரட்டைச் சதத்தை 2016-இல் மேற்கிந்தியத் தீவுகளில் அடித்தார். அதன்பிறகு 2016/17-இல் இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் 235 ரன்கள் குவித்து அசத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com