கோலி 254*, ஜடேஜா 91 ரன்கள்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 601/5 டிக்ளேர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய அணி கேப்டன் 254 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
கோலி 254*, ஜடேஜா 91 ரன்கள்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 601/5 டிக்ளேர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய அணி கேப்டன் 254 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

2-வது டெஸ்ட் புணேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 85.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. கோலி 63, ரஹானே 18 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

நேற்று காலையில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. அதேபோல இன்று காலையும் விக்கெட்டுகளை வீழ்த்தும் எண்ணத்தில் துல்லியமாகப் பந்துவீசினார்கள் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள். இதனால் நான்காவது ஓவரில்தான் முதல் பவுண்டரி கிடைத்தது. 96-வது ஓவரில் கோலி - ரஹானே கூட்டணி 100 ரன்களைத் தொட்டது. இது மட்டும் நிகழாமல் போயிருந்தால் இந்திய அணி மிகவும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும். இவர்களுக்குப் பின்னால் வருபவர்கள் எல்லோரும் விக்கெட் கீப்பரும் பந்துவீச்சாளர்களும்தான். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு அந்தச் சூழல் சாதகமாக இருந்திருக்கும். ஆனால் கவனமாக விளையாடி அப்படியொரு நிலைமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள் கோலியும் ரஹானேவும். இன்றைய நாளின் முக்கியமான முதல் ஒரு மணி நேரத்தில் விக்கெட் எதுவும் விழவில்லை. 141 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார் ரஹானே. சூழலைப் புரிந்துகொண்டு அற்புதமான பேட்டிங் திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இன்னிங்ஸில் முக்கியமான சாதனை ஒன்றை நிகழ்த்தினார் கோலி. இந்திய முன்னாள் வீரர் வெங்சர்கார் 116 டெஸ்டுகளில் எடுத்த 6868 டெஸ்ட் ரன்களை இந்த இன்னிங்ஸில் கடந்தார் கோலி. இதன் அடிப்படையில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 7-ம் இடத்தைப் பிடித்தார் கோலி. 

கடந்த வருடம் டிசம்பரில் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்தார் கோலி. அதன்பிறகு அவர் 5 டெஸ்டுகள் விளையாடியும் அடுத்தச் சதத்தை எடுக்கமுடியவில்லை. இதனால் இந்த டெஸ்டில் கோலி சதமெடுப்பார் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றினார் கோலி. இதுதான் 2019-ல் கோலி எடுக்கும் முதல் சதம். 

பிலாண்டரின் பந்தில் அழகான ஸ்டிரைட் டிரைவ் அடித்து தனது 26-வது டெஸ்ட் சதத்தை 173 பந்துகளில் பூர்த்தி செய்தார் விராட் கோலி. இதன்பிறகு கோலி - ரஹானே கூட்டணி 150 ரன்களைக் கடந்தது. 

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 113 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 104, ரஹானே 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, மஹாராஜா பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து 59 ரன்களில் வெளியேறினார். இதன்மூலம் 100-வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் மஹாராஜா. 6-வது வீரராகக் களமிறங்கினார் ஜடேஜா. இதன்பிறகு, 241 பந்துகளில் 150 ரன்களை எடுத்தார் கோலி. மேலும் டெஸ்ட் கேப்டனாக அதிக தடவை 150 ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெயரையும் அவர் பெற்றார். இதற்கு முன்பு பிராட்மேன், கேப்டனாக இருந்தபோது 8 தடவை 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவருடைய சாதனையைத் தாண்டி 9 தடவை 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் கோலி. 

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 141 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்தது. கோலி 194, ஜடேஜா 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கோலி - ஜடேஜா கூட்டணி 100 ரன்களை எட்டியது. ஒரு பேட்ஸ்மேன் குறைவாக ஆடுகிற நிலையில் ரஹானேவும் ஜடேஜாவும் கோலிக்கு நல்ல இணையாக விளங்கி இந்திய அணி பெரிய ஸ்கோரை அடைய உதவியிருக்கிறார்கள். 

197 ரன்களைக் கடந்தபோது பிராட்மேனின் டெஸ்ட் ரன்களைக் (6996) கடந்தார் கோலி. இதையடுத்து தனது 7-வது இரட்டைச் சதத்தை 295 பந்துகளில் அடைந்தார். இதன்மூலம் அதிக இரட்டைச் சதங்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றார். இரட்டைச் சதம் எடுத்தபோது 7000 டெஸ்ட் ரன்களையும் அவர் கடந்தார்.

இந்திய அணி 146 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்தது. 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் ரன்ரேட் ஒரு கட்டத்தில் 7-க்கும் அதிகமாக இருந்தது. 79 பந்துகளில் தன்னுடைய 12-வது அரை சதத்தை எட்டினார் ஜடேஜா. வழக்கம்போல பேட்டைச் சுழற்றி ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டார். மஹாராஜா வீசிய 150-வது ஓவரில் கோலியும் ஜடேஜாவும் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து 21 ரன்களை எடுத்தார்கள். இந்திய அணி விரைவில் டிக்ளேர் செய்யும் முடிவில் இருந்ததால் இருவரும் விரைவாக ரன்கள் சேர்த்தார்கள். இதனால் மூன்றாம் பகுதியின் ரன்ரேட் 9-ஆக உயர்ந்தது. டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் டி20 ஆட்டத்தைக் கண்டுகளிக்கும் உணர்வைப் பெற்றார்கள். ஒருகட்டத்தில் 12 ஓவர்களில் இருவரும் 100 ரன்களை எடுத்தார்கள். கோலி - ஜடேஜா கூட்டணி, 215 பந்துகளில் 200 ரன்களை எட்டி அசத்தியது. இதனால் என்ன செய்வதென்று தவித்தார்கள் தென் ஆப்பிரிக்க வீரர்கள்.

தன்னுடைய டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோரான 243 ரன்களைக் கடந்த கோலி, 334 பந்துகளில் 250 ரன்களைக் கடந்தார். 156-வது ஓவரில் 600 ரன்களைக் கடந்தது இந்திய அணி. அடுத்ததாக ஜடேஜாவின் சதத்தை அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை 601 ரன்களில் டிக்ளேர் செய்தார் கோலி. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் எடுத்தது. கோலி 254 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருடைய அதிகபட்ச டெஸ்ட் ரன்களாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com