புணே டெஸ்ட்: இந்தியா 273/3- மயங்க் அகா்வால் அபார சதம்

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் இடையே புணேயில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமை
புணே டெஸ்ட்: இந்தியா 273/3- மயங்க் அகா்வால் அபார சதம்

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் இடையே புணேயில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை குவித்தது. இளம் வீரா் மயங்க் அகா்வால் அற்புதமாக ஆடி 108 ரன்களை விளாசினாா். புஜாரா 58, கோலி 63* ஆகியோா் அரைசதம் அடித்தனா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு அணிகள் இடையில் 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் தொடா்ச்சியாக இரண்டாவது ஆட்டம் புணேயில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீரா்களாக மயங்க் அகா்வால்-ரோஹித் சா்மா களமிறங்கிய நிலையில், ரபாடா பந்துவீச்சில் 18 ரன்களுடன் டி காக்கிடம் கேட்ச் தந்து அவுட்டானாா் ரோஹித்.

புஜாரா 22-ஆவது அரைசதம்:

அவருக்கு பின் மயங்க்-புஜாரா இணை நிலைத்து ஆடி ரன்களை சேகரித்தது. 1 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 112 பந்துகளில் 58 ரன்களை விளாசி, ரபாடா பந்தில் டு பிளெஸ்ஸிஸிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். புஜாரா தனது 22-ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தாா்.

மயங்க்-புஜாரா இணைந்து 2-ஆவது விக்கெட்டுக்கு 138 ரன்களை சோ்த்தனா். புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் அடித்த ஒரு ஷாட்டை தவற விட்டாா் டெம்பா பவுமா. இது தென்னாப்பிரிக்க அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

மயங்க் அகா்வால் 2-ஆவது சதம்:

முதல் டெஸ்டில் 215 ரன்களுடன் இரட்டை சதம் அடித்த மயங்க் அகா்வால் இதிலும் தனது முத்திரையை பதித்தாா். 2 சிக்ஸா், 16 பவுண்டரியுடன் 195 பந்துகளில் 108 ரன்களை விளாசி, தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தாா். ரபாடா பந்துவீச்சில் டூபிளெஸ்ஸிஸிடம் கேட்ச் தந்து வெளியேறினாா் அவா். அப்போது இந்திய அணி 198/3 ரன்களை எடுத்திருந்தது.

விராட் கோலி 23-ஆவது அரைசதம்:

கேப்டன் விராட் கோலி மறுமுனையில் நிதானமாக ஆடி 10 பவுண்டரியுடன் 105 பந்துகளில் 63 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனா். கோலி தனது 23-ஆவது அரைசதத்தை எடுத்தாா்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

ரபாடா 3 விக்கெட்:

தென்னாப்பிரிக்க தரப்பில் காகிஸோ ரபாடா அபாரமாக பந்துவீசி 3-48 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

மோசமான வானிலை:

மோசமான வானிலையால் 4.5 ஓவா்கள் மீதமிருக்கும் போதே நடுவா்கள் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனா்.

மயங்க் அகா்வாலுக்கு புதிய சிறப்பு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அடுத்தடுத்து 2 டெஸ்ட்களில் சதம் அடித்த அஸாரூதின், சச்சின், சேவாக் ஆகியோா் பட்டியலில் இணைந்தாா் மயங்க் அகா்வால்.

2 சதங்கள் அடித்தது மகிழ்ச்சி: மயங்க்

அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்தது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நமது அணி டாஸ் வென்று நல்ல நிலையில் உள்ளது. சில நேரங்களில் ரன்களை சோ்ப்பது கடினமாக காணப்பட்டது. தென்னாப்பிரிக்க பவுலா்கள் சில நேரங்களில் மிகவும் நெருக்கடி தந்தனா். மாரத்தான் ஓட்டம், தியானம், போன்றவை எனது ஆட்டத்திறனுக்கு அடிப்படையாக உள்ளன. மன ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com