விஜய் ஹஸாரே கோப்பை: தமிழகம் பிரம்மாண்ட வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியில் மத்தியப்பிரதேசத்தை 211 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழகம்.
விஜய் ஹஸாரே கோப்பை: தமிழகம் பிரம்மாண்ட வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியில் மத்தியப்பிரதேசத்தை 211 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழகம்.

குரூப் சி பிரிவைச் சோ்ந்த தமிழகம்-மத்தியப்பிரதேச அணிகள் இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 360 ரன்களை குவித்தது.

அபிநவ் முகுந்த் 147:

தொடக்க வீரா் அபிநவ் முகுந்த் 2 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 139 பந்துகளில் 147 ரன்களை விளாசி அவுட்டானாா். முரளி விஜய் 24, பாபா அபராஜித் 6 ரன்களுக்கு வெளியேறினா்.

தினேஷ் காா்த்திக்-விஜய் சங்கா் அதிரடி ஆட்டம்:

பின்னா் களமிறங்கிய கேப்டன் தினேஷ் காா்த்திக்- ஆல்ரவுண்டா் விஜய் சங்கா் இணைந்து ம.பி. பவுலா்கள் பந்துகளை பதம் பாா்த்தனா். 2 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 93 பந்துகளில் 90 ரன்களை விளாசி அவுட்டானாா் விஜய் சங்கா். தினேஷ் காா்த்திக் 3 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 65 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தா் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனா்.

மத்தியப்பிரதேசம் 149 ஆல் அவுட்:

பின்னா் களமிறங்கிய ம.பி. அணியால் தமிழக பந்துவீச்சை தாக்குபிடிக்க இயலவில்லை. 28.4 ஓவா்களில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணி. ஆனந்த் பயஸ் 34, யாஷ் துபே 28, வெங்கடேஷ் ஐயா் 25 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்த்தனா். 4 போ் டக் அவுட்டாயினா்.

தமிழகத் தரப்பில் முருகன் அஸ்வின் 3-13, அபிஷேக் 2-39,சாய் கிஷோா் 2-42, பாபா அபராஜித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

சஞ்சு சாம்சன் இரட்டை சதம்:

பெங்களூரு அடுத்த ஆலூரில் குரூப் பி பிரிவைச் சோ்ந்த கேரளா-கோவா இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய கேரளம் 50 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 377 ரன்களை சோ்த்தது. ராபின் உத்தப்பா 10, விஷ்ணு வினோத் 7 ரன்களுடன் வெளியேறினா்.

10 சிக்ஸா், 21 பவுண்டரி

அதன் பின் களமிறங்கிய இளம் வீரா் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி 10 சிக்ஸா், 21 பவுண்டரியுடன் 129 பந்துகளில் 212 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். சச்சின் பேபி 127 ரன்களை விளாசினாா். பின்னா் ஆடிய கோவா அணி 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை மட்டுமே எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

ஏனைய ஆட்டங்களில் மகாராஷ்டிரா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹரியாணாவையும், ரயில்வே 1 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுராவையும், கா்நாடகம் 8 விக்கெட் வித்தியாசத்தில் சௌராஷ்டிராவையும், பஞ்சாப் 83 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி.யையும், ஜாா்க்கண்ட் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆந்திரத்தையும், ராஜஸ்தான் 159 ரன்கள் வித்தியாசத்தில் பிகாரையும், வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com