பிசிசிஐ தலைவராகிறார் சௌரவ் கங்குலி!

பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் இவர்கள் அனைவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளனர். 
பிசிசிஐ தலைவராகிறார் சௌரவ் கங்குலி!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் செயலராக மத்திய அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சௌரவ் கங்குலியும், குஜராத் கிரிக்கெட் சங்க உறுப்பினராக ஜெய் ஷாவும் செயல்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று முன்னாள் பிசிசிஐ தலைவரும், தற்போதைய மத்திய இணையமைச்சருமான அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால், பொருளாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ், இணைச் செயலராக தேர்வாகிறார்.

இதற்கான மனு தாக்கல் கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. பின்னர் அக். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் இவர்கள் அனைவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், முன்னாள் செயலர் நிரஞ்சன் ஷா மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் பெயரை என்.ஸ்ரீனிவாசன் பரிந்துரைத்தார்.

இந்நிலையில், அனுராக் தாக்கூர் முன்மொழிந்த சௌரவ் கங்குலி பெயர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு இறுதிசெய்யப்பட்டது. மேலும் ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேலை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

பிசிசிஐ தலைவராகும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் எனும் பெருமை சௌரவ் கங்குலிக்கு கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com