நான் விளையாட வேண்டும் என தேர்வுக்குழுவினரிடம் சொன்னேன்: உமேஷ் யாதவ்

இந்திய அணிக்கு நான் தேர்வாவது என் கையில் இல்லை. எல்லோரும் சிறப்பாகப் பந்துவீசுவதால் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது...
நான் விளையாட வேண்டும் என தேர்வுக்குழுவினரிடம் சொன்னேன்: உமேஷ் யாதவ்

2016, 2017-ம் ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான பந்துகளை வீசிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் - உமேஷ் யாதவ். அதற்குப் பிறகு கடுமையான போட்டியால் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது குறைந்து போனது. இந்தியாவின் கடைசி 18 டெஸ்டுகளில் 5-ல் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். எனினும் பும்ராவுக்குக் காயம் ஏற்பட்டதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றார் உமேஷ் யாதவ். இப்போது புணே டெஸ்டில் அட்டகாசமாகப் பந்துவீசி பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 59 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

செய்தியாளர்களிடம் உமேஷ் யாதவ் கூறியதாவது:

அணியில் இடம் இல்லை என்பது கிரிக்கெட்டில் சகஜமாக நடக்கும். எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது நான் தயாராக இருக்கவேண்டும். இதனால் சரியான பயிற்சிக்காக கிரிக்கெட் ஆட்டங்களில் தொடர்ந்து நான் விளையாடிக்கொண்டிருக்க வேண்டும். அதிகமான ஆட்டங்களில் விளையாடும்போதுதான் அதிகமான பயிற்சிகள் கிடைக்கும். வலைப்பயிற்சியில் ஈடுபடுவதை விடவும் ஆட்டங்களில் விளையாடுவது அதிகப் பலனளிக்கும்.

இந்திய அணிக்கு நான் தேர்வாவது என் கையில் இல்லை. எல்லோரும் சிறப்பாகப் பந்துவீசுவதால் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. குறிப்பிட்ட தருணத்தில், எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். 

மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் நான் விளையாடவில்லை. இதனால் தேர்வுக்குழுவினரிடம், இந்திய ஏ அணிக்கு என்னைத் தேர்வு செய்யக் கோரிக்கை விடுத்தேன். அப்போதுதான் எனக்கு முறையான பயிற்சி கிடைக்கும். ரஞ்சிப் போட்டியும் இல்லை, ஒருநாள் ஆட்டங்களும் இல்லை. எனவே தான் இந்திய ஏ அணியில் என்னைத் தேர்வு செய்யும்படி தேர்வுக்குழுவினரிடம் கூறினேன். அவர்களும் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். வீட்டிலோ வேறு இடங்களிலோ பயிற்சி எடுக்கும்போது திடீரென சர்வதேச ஆட்டங்களில் விளையாட நேர்ந்தால் கடினமாக இருக்கும். ஆட்டத்தில் பந்துவீசுவதற்கும் வலைப்பயிற்சியில் பந்துவீசுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்று கூறியுள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் ஆட்டத்தை 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 2-0 என கைப்பற்றியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com