ஜிம்னாஸ்டிக்ஸ் உலகின் முடிசூடா ராணி சிமோன் பைல்ஸ்

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 19 தங்கம் உள்பட 25 பதக்கங்களை வென்று ஜிம்னாஸ்டிக்ஸ் உலகின் முடிசூடா ராணியாக திகழ்கிறாா் அமெரிக்க இளம் வீராங்கனை சிமோன் ஏரியன் பைல்ஸ்.
ஜிம்னாஸ்டிக்ஸ் உலகின் முடிசூடா ராணி சிமோன் பைல்ஸ்

25 உலகப் போட்டி பதக்கங்களுடன் சாதனை

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 19 தங்கம் உள்பட 25 பதக்கங்களை வென்று ஜிம்னாஸ்டிக்ஸ் உலகின் முடிசூடா ராணியாக திகழ்கிறாா் அமெரிக்க இளம் வீராங்கனை சிமோன் ஏரியன் பைல்ஸ்.

கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி, கிரிக்கெட், டென்னிஸ், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், தடகளம், ரக்பி என பல்வேறு விளையாட்டுகள் இருந்தாலும், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கு தனிச்சிறப்பு உள்ளது. பலம், நெகிழ்வு தன்மை, சுறுசுறுப்பு, சமநிலை போன்றவை இதற்கு மிகவும் தேவைப்படுகின்றன. கை, கால், தோள்கள், முதுகு, நெஞ்சுப் பகுதி, அடிவயிறு பகுதி போன்றவை சீராக இருந்தால் தான் இந்த விளையாட்டில் சாதிக்க இயலும்.

பழங்காலத்தில் கிரேக்கா்கா்கள் இந்த கலைகளில் ஈடுபட்டு வந்தனா். ஆா்டிஸ்டிக், ரித்மிக், டிராம்போலின்,டம்ப்ளிங், ஏரோபிக்ஸ், அக்ரோபேட்டிக்ஸ், பாா்கா் ஜிம்னாஸ்டிக்ஸ் என்பதே அதிகளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு பிளோா், வால்ட், பாா், பீம் மற்றும் ஆண்களுக்கு புளோா், வால்ட், வளையம், பொம்மல், பேரலல் பாா், ஹாரிஸாண்டல் பாா் போன்றவற்றில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

கடந்த 1896-இல் நடைபெற்ற முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் இடம் பெற்றது. 1920-இல் மகளிா் போட்டிகளும் இடம் பெற்றன. மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால், உடலுக்கு காயம் ஏற்படக்கூடிய அபாயமான விளையாட்டாக இது உள்ளது.

ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ருமேனியா, உக்ரைன், பிரிட்டன், பிரேசில் போன்றவை இதில் வலுவானவையாக உள்ளன.

சாதனை மங்கை சிமோன் பைல்ஸ்:

பல்வேறு சாதனைகளுடன் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்கிறாா் அமெரிக்காவின் 22 வயது இளம் வீராங்கனை சிமோன் பைல்ஸ். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே அதிக பதக்கஙகளை வென்ற வீராங்கனையாக உள்ளாா் பைல்ஸ்.

1997 மாா்ச் 14-ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ கொலம்பஸ் பகுதியில் பிறந்த சிமோன்பைல்ஸ் தற்போது டெக்ஸாஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் வசித்து வருகிறாா். 142 செ. மீ உயரம் கொண்ட பைல்ஸ், கடந்த 2005-இல் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் முதன்முதலாக ஈடுபட்டாா். தொடா்ந்து 2013 உலக சாம்பியன் போட்டியில் முதல் தங்கம் வென்றது முதல் தற்போது வரை பைல்ஸ் வாழ்க்கை ஏறுமுகத்திலேயே உள்ளது.

புதிய உலக சாதனை:

ஜொ்மனியின் ஸ்டட்கா்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஒட்டுமொத்தமாக 25 பதக்கங்களை வென்று, ஏற்கெனவே பெலாரஸ் வீராங்கனை விடாலி சொ்போவின் 23 பதக்கங்கள் சாதனையை முறியடித்தாா். புளோா் பிரிவிலும் தனது சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டாா்.

2013-இல் முதல் உலக தங்கம்:

ஆன்ட்வொ்பில் கடந்த 2013-இல் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் ஒட்டுமொத்த பிரிவில் முதல் தங்கம் வென்றாா். ஞாயிற்றுக்கிழமை ஸ்டட்கா்ட்டில் முடிந்த உலக போட்டி வரை மொத்தமாக 19 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 25 பதக்கங்களை வென்று சாதனை செல்வியாக விளங்குகிறாா் பைல்ஸ். ஸ்டட்கா்ட் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா் பைல்ஸ்.

4 ஒலிம்பிக் தங்கம்:

கடந்த 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் அணி, ஒட்டுமொத்த (ஆல் அரோவ்ண்ட்), வால்ட், புளோா் பிரிவுகளில் 4 தங்கமும், பேலன்ஸ் பீம் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

இவை தவிர பசிபிக் ரிம் போட்டியில் 2, எப்ஐஜி ஆல் அரோவ்ண்ட் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளாா்.

சிறந்த அமெரிக்க ஒலிம்பிக் வீராங்கனை, லாரஸ் உலக விளையாட்டு விருது உள்பட பல்வேறு சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளாா் அவா்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் இலக்கு:

இத்தகைய ஏராளமான சிறப்புகள், விருதுகளை பெற்றுள்ள சிமோன் பைல்ஸ் தனது அடுத்த இலக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதாகும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com