சரிவில் இருந்து மீட்ட ரோஹித் - ரஹானே: முதல் நாள் ஆட்டம் பாதிப்பு!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி செஷன் மழை காரணமாக கைவிடப்பட்டது.
சரிவில் இருந்து மீட்ட ரோஹித் - ரஹானே: முதல் நாள் ஆட்டம் பாதிப்பு!


இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி செஷன் மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி டாப் ஆர்டரில் சரிவு ஏற்பட்டது.

மயங்க் அகர்வால் 10, சேத்தேஷ்வர் புஜாரா 0, விராட் கோலி 12 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால், இந்திய அணி 39 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்நிலையில், ரோஹித் சர்மாவுடன் அஜின்க்யா ரஹானே ஜோடி சேர்ந்தார். ரோஹித் தொடக்கம் முதல் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரஹானே தொடக்கத்தில் எளிதான பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்து வந்தார். இதனால், இந்திய அணி பக்கம் இருந்த நெருக்கடி தென் ஆப்பிரிக்காவை சூழ்ந்தது.

இதைப் பயன்படுத்திய ரோஹித், ரஹானே இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பிறகு ரோஹித் சர்மா ரன் குவிப்பதை சற்று துரிதப்படுத்தினார். குறிப்பாக டேன் பீட் சுழற்பந்துவீச்சில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்த ரோஹித் சர்மா, சிக்ஸர் மூலமே இந்த தொடரின் 3-வது சதத்தை அடித்தார்.

இந்த இணையின் சிறப்பான ஆட்டத்தால் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 108 ரன்களுடனும், ரஹானே 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு 6 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மழையும் பெய்து ஓய்ந்தது. இதனால், அங்கு மீண்டும் ஆட்டம் தொடங்குவதற்கான உகந்த சூழல் இல்லாத காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்திய அணி முதல் நாளில் 58 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், அஜின்க்யா ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், அன்ரிச் நார்ட்ஜே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com