இதை மட்டும் தவறவிட்டிருந்தால் என்னென்னவோ நடந்திருக்கும்: ரோஹித் சர்மா

இந்த வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தால் என்னென்னவோ நடந்திருக்கும் என்று இரட்டைச் சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதை மட்டும் தவறவிட்டிருந்தால் என்னென்னவோ நடந்திருக்கும்: ரோஹித் சர்மா


இந்த வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தால் என்னென்னவோ நடந்திருக்கும் என்று இரட்டைச் சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதன் 2-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சார்பில் ரோஹித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

"நான் நன்றாக விளையாடாமல் இருந்திருந்தால் நிறைய நடந்திருக்கும். நீங்கள் (ஊடகங்கள்) என்னைக் குறித்து நிறைய எழுதியிருப்பீர்கள். அதனால், கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் பிரதானமாக இருந்தது. தற்போது அனைவரும் என்னைக் குறித்து நல்ல ரீதியில்தான் எழுதுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. விசாகப்பட்டினம் டெஸ்ட் ஆட்டத்தில் தெரிவித்ததுபோல், நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்கிற முடிவை அணி நிர்வாகம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே என்னிடம் தெரிவித்துவிட்டது. இதனால், இந்த வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதால் நான் உளவியல் ரீதியாக அதற்குத் தயாராகவே இருந்தேன்.

குறிப்பாக இந்த இரட்டைச் சதத்தைக் குறித்து பேச வேண்டுமென்றால், இது மிகவும் சவாலானது என்பேன். நான் நிறைய டெஸ்ட் ஆட்டங்கள் விளையாடியது இல்லை. 30 டெஸ்ட் ஆட்டங்களில் மட்டும்தான் விளையாடியுள்ளேன். இதனால், என்னை நோக்கி வந்த அனைத்துமே மிகவும் சவாலானதுதான் என்றே சொல்வேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென்று சில சவால்கள் உள்ளது. தொடக்க ஆட்டக்காரராக வெறும் 3 ஆட்டங்கள் மட்டும்தான் விளையாடியுள்ளேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இந்த 3 டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து நிறைய நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொண்டாலும், இவை குறித்து நிறைய ஆய்வு செய்யப்போவதில்லை.

6 அல்லது 7-வது பேட்டிங் வரிசையில் இருக்கும் சவால்களுக்கும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் போது இருக்கும் சவால்களுக்கும் வேறுபாடு உள்ளது. நம்மை எப்படி தயார்படுத்திக்கொள்கிறோம், களத்தில் இறங்கு எதைச் செய்து சாதிக்க வேண்டும் என்று நமக்குள் எப்படி உரையாடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் உள்ளது. ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொள்வதையும், 30 -40 ஓவர்கள் கழித்து பந்தை எதிர்கொள்வதையும் ஒப்பிட்டால் அது முற்றிலும் வெவ்வேறானது. நுட்பமாக நான் எதையும் குறிப்பிட்டு செய்யவில்லை. 

புதிய பந்தை எங்கு எதிர்கொண்டாலும், கிரிக்கெட்டின் அடிப்படை குறித்த புரிதல் வேண்டும். எந்தப் பந்தை எதிர்கொள்ள வேண்டும், எதை விளையாடக் கூடாது என்பது குறித்து புரிதல் வேண்டும். 

வெளிநாடுகளில் இது முற்றிலும் வேறு மாதிரியான ஆட்டம். அது சவால் மிகுந்தது. அதற்காக காத்திருக்கிறேன்" என்றார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் ரோஹித் சர்மா முதன்முதலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். இதை சிறப்பாக எதிர்கொண்ட அவர் முதல் டெஸ்டில் இரண்டு சதங்கள், 3-வது டெஸ்டில் இரட்டைச் சதம் என அசத்தி வருகிறார். இந்த தொடரில் இதுவரை அவர் 4 இன்னிங்ஸில் விளையாடி 529 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 5-வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையையும் அவர் அடைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com