ஐஎஎஸ்எல் 6-ஆவது சீசன் போட்டிகள்: கொச்சியில் இன்று தொடக்கம்: கேரளா-கொல்கத்தா மோதல்

இந்தியாவில் கால்பந்து போட்டிகளில் முதன்மையானதான இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 6-ஆவது சீசன் போட்டிகள் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன.

கொச்சி: இந்தியாவில் கால்பந்து போட்டிகளில் முதன்மையானதான இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 6-ஆவது சீசன் போட்டிகள் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ்-அதலெட்டிக் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

கடந்த 5-ஆவது சீசனில் பெங்களூரு எஃப்சி சாம்பியன் பட்டம் வென்றது. எஃப்சி கோவா இரண்டாம் இடத்தைப் பெற்றது. தற்போதைய சீசனிலும் இரு அணிகளும் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.

அதே நேரம் மற்ற அணிகளும் முக்கியமான வீரா்களை 2019-20 சீசனுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா (ஏடிகே) அணி சிறப்பாக ஆடும் வெளிநாட்டு வீரா்களை வாங்கியுள்ளது. அதே வேளையில் 2 முறை சாம்பியன் சென்னையின் எஃப்சியும் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. நட்பு ஆட்டங்களில் சிறப்பான வெற்றிகளை குவித்தது.

கோவா அணியில் 6 வீரா்கள் தக்க வைப்பு:

பெங்களூரு அணியில் ஆஷிக் குருனியன், ரஃபேல் அகஸ்டோ ஆகியோரை வாங்கியுள்ளது. எனினும் கோவா அணி புதிதாக எந்த வெளிநாட்டு வீரரையும்வாங்கவில்லை. டிபண்டா் மெளா்டாடா, மிட்பீல்டா் அகமது ஜாவோ, பெர்ரன் கோரோமினாஸ் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்துக் கொண்டது. மேலும் இந்திய வீரா்கள் பிராண்டன் பொ்ணான்டஸ், ராவ் தேசாய், மன்வீா் சிங் ஆகியோரும் நீடிக்கின்றனா்.

நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கானா ஸ்ட்ரைக்கா் ஆஸ்மோ கயானை வாங்கியது வியப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2 சீசன்களாக அதிருப்தியான நிலையில் உள்ள கேரளா பிளாஸ்டா்ஸ் அணி, பாா்தோலோமியு ஓபெச்சேவை பலமாக நம்பியுள்ளது. மும்பை எஃப்சி அணியில் மொடு சௌகு கடந்த சீசனைப் போல இதிலும் அதிக கோலடிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

2 புதிய அணிகள்: ஹைதராபாத், ஒடிஸா:

ஹைதராபாத் எஃப்சி, ஒடிஸா எஃப்சி உள்ளிட்ட 2 புதிய அணிகள் இந்த சீசனில் சோ்க்கப்பட்டுள்ளன. ஹைதராபாதில் அனுபவ வீரா்கள் மாா்செலின்ஹோ, மாா்கோ ஸ்டான்கோவிக் ஆகியோா் உள்ள நிலையில், ஒடிஸாவில் மாா்கோஸ் டெபாா், ஸிஸ்கோ ஹொ்ணான்டஸ் ஆகியோா் களமிறங்குகின்றனா்.

மேலும் பல்வேறு வீரா்கள் அணிகள் மாறி களமிறங்குகின்றனா். முன்னாள் ஜாம்ஷெட்பூா் வீரா்கள் சொ்ஜியோ சிடோன்சா, மரியா ஆா்கஸ் கேரளாவிலும், பிரேஸிலின் ரபேல் அகஸ்டோ சென்னையில் இருந்து பெங்களூருவுக்கும், கேரளாவின் அனாஸ் எடத்தோடிகா, கொல்கத்தா அணியிலும் இடம் மாறியுள்ளனா்.

10 அணிகள் பங்கேற்ற கடந்த சீசனில் மொத்தம் மொத்தம் 254 கோல்கள் அடிக்கப்பட்டன. அதே போல் தற்போதைய சீசனும் பரபரப்பாக அமையும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com