முழுமையாக முடிந்த மூன்றாவது செஷன்: மீண்டும் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா!

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் ஃபாலோ ஆன் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது.
முழுமையாக முடிந்த மூன்றாவது செஷன்: மீண்டும் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா!


இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் ஃபாலோ ஆன் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 335 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை ஃபாலோ ஆன் செய்ய அழைத்தது.

அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி மிரட்டல் தொடக்கத்தை தந்தனர். உமேஷ் யாதவ் தனது முதல் பந்திலேயே குயின்டன் டி காக்கை போல்டாக்கினார். அதன்பிறகு, ஹம்ஸா, டு பிளெஸ்ஸி மற்றும் பவுமாவை முகமது ஷமி தனது வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதனால், அந்த அணி 22 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்த நிலையில் உமேஷ் யாதவின் அட்டகாசமான பவுன்சரால் டீன் எல்கர் காயமடைந்தார். இதனால், தேநீர் இடைவேளையும் அறிவிக்கப்பட்டது. இந்த இடைவேளையின்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், அவருக்குப் பதில் மாற்று வீரராக டி புரூய்ன் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, டீன் எல்கருக்குப் பதிலாக அறிமுக ஆட்டக்காரர் ஜார்ஜ் லிண்டே ஒரு விக்கெட் முன்னதாக களமிறங்கினார். 3-வது செஷன் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கிளாஸென் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டெயிலண்டர்கள் வழக்கம்போல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். இருந்தபோதிலும், லிண்டே 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதையடுத்து, எல்கருக்குப் பதிலாக மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட டி புரூய்ன் களமிறங்கினார்.

லிண்டே விக்கெட்டுப் பிறகும் தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. டேன் பீட் ஜடேஜா சுழலிலும், ககிசோ ரபாடா அஸ்வின் சுழலிலும் ஆட்டமிழந்தனர். டி புரூய்ன் மட்டும் விக்கெட்டைப் பாதுகாத்து 3-ஆம் நாள் ஆட்டம் முடியும் களத்திலேயே இருந்தார். 

இன்றைய ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியைவிட இன்னும் 203 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தின் முதலிரண்டு நாட்களில் 3-வது செஷன் போதிய வெளிச்சமின்மை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முழுமையாக விளையாடப்பட்டது. 

இந்த ஆட்டத்தில் இன்னும் இரண்டு முழு நாட்கள் இருப்பதால், இந்திய அணி மீண்டும் இன்னிங்ஸ் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com