நான் உள்ள வரை அனைவரும் மதிக்கப்படுவார்கள்: தோனி குறித்த கேள்விக்கு சௌரவ் பதில்!

தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, "நான் இருக்கும் வரை அனைவரும் மதிக்கப்படுவார்கள்" என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.
நான் உள்ள வரை அனைவரும் மதிக்கப்படுவார்கள்: தோனி குறித்த கேள்விக்கு சௌரவ் பதில்!


தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, "நான் இருக்கும் வரை அனைவரும் மதிக்கப்படுவார்கள்" என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சௌரவ் கங்குலி இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது பேசுகையில்,

"நான் இந்திய அணியை வழிநடத்தியதுபோல், நம்பகத்தன்மையிலும், ஊழலற்ற நிர்வாகத்திலும் எந்தவித சமரசமும் இருக்காது. பிசிசிஐ-யின் கீழ் உள்ள அனைத்திற்கும் இது பொருந்தும். இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய நபராக விராட் கோலி இருக்கிறார். அவருடைய கருத்தையும் கேட்போம். இருதரப்பு கருத்துகளுக்கும் பரஸ்பரம் மதிப்பளிக்கப்படும். நாளை விராட் கோலியிடம் பேசவுள்ளேன். எங்களால் முடிந்த அளவுக்கு, வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்து அவருக்கு ஆதரவளிப்போம்" என்றார்.

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறியதிலிருந்து மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தலை காட்டவில்லை. அடுத்து நடைபெறும் வங்கதேசத்துடனான டி20 தொடரிலும் அவர் பங்கேற்பது உறுதியாகவில்லை. இதனால், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்,

"சாம்பியன் வீரர்கள் விரைவில் ஓய்ந்துவிடமாட்டார்கள். நான் இருக்கும் வரை அனைவரும் மதிக்கப்படுவார்கள்" என்றார்.

முன்னதாக, பிசிசிஐ தலைவராக சௌரவ் கங்குலி தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், "யோ-யோ தேர்வு சமயத்திலேயே நீங்களே பிசிசிஐ தலைவராக இருந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும், இந்திய அணியில் இருந்து தான் ஓரங்கட்டப்பட்டதாக யுவராஜ் சிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com