ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சியாளர் இல்லாமல் தத்தளிக்கும் இந்திய ஸ்குவாஷ் அணி

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் இந்திய ஸ்குவாஷ் அணி வீரர், வீராங்கனைகள் தத்தளித்து வருகின்றனர்
ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சியாளர் இல்லாமல் தத்தளிக்கும் இந்திய ஸ்குவாஷ் அணி


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் இந்திய ஸ்குவாஷ் அணி வீரர், வீராங்கனைகள் தத்தளித்து வருகின்றனர்.
உள்ளரங்க மைதானத்தில் விளையாடப்படும் ஆட்டங்களில் ஒன்றாக உள்ளது ஸ்குவாஷ். 4 சுவர்கள் கொண்ட கண்ணாடி அறை மைதானத்தில் ஆடவர், மகளிர் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் ஆட்டங்கள் நடக்கின்றன. ராக்கெட்டை பயன்படுத்தி சிறிய, ரப்பர் பந்தை அடித்து ஆட வேண்டும். ஆட்டத்தின் நோக்கமே, எதிராளி ஆட முடியாத வகையில் பந்தை நுட்பமாக அடிக்க வேண்டும். அதிகபட்ச புள்ளிகள் 11 ஆகும். 
185 நாடுகள்: 185 நாடுகளில் 2 கோடிக்கு மேற்பட்டோரால் ஆடப்பட்டு வரும் ஸ்குவாஷ் சற்று அதிக பொருள்செலவு மிக்கதாகும். 
கடந்த 1830 முதல் ஆடப்பட்டு வரும் பழமையான விளையாட்டு ஸ்குவாஷ் ஆகும். 
உலக ஸ்குவாஷ் சம்மேளனத்தால் நிர்வகிக்கப்படும் இது, ஒலிம்பிக் போட்டியில் நீண்ட முயற்சிக்கு பின்னரும் இன்னும் சேர்க்கப்படவில்லை.
அதே நேரத்தில் உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் ஸ்குவாஷ் விளையாட்டு வழக்கமாக இடம் பெறுகிறது.
எகிப்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, இந்தியா, தென் கொரியா, உள்ளிட்ட நாடுகள் ஸ்குவாஷில் பலமாக உள்ளன.
செளரவ் கோஷல், ஜோஷ்னா: இந்தியாவிலும் ஸ்குவாஷ் அதிக வளர்ச்சி பெற்று வருகிறது.  ஆடவர் பிரிவில் செளரவ் கோஷல், ரித்விக் பட்டாச்சார்யா, மகேஷ் மங்கோன்கர், உத்கர்க் பஹேட்டி,  மகளிர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், ஆகியோர் புகழ் பெற்று விளங்குகின்றனர். 
செளரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பாக, தீபிகா பல்லிக்கல் உள்ளிட்டோர் ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் நாட்டுக்கு பதக்கம் பெற்றுத் தந்தனர்.
முழு நேர பயிற்சியாளர் இல்லாமல் அவதி: இந்திய ஸ்குவாஷ் அணியின் முழு நேர பயிற்சியாளராக எகிப்தின் அஷ்ரப் காரகை செயல்பட்டு வந்தார். அவர் கடந்த 2018 கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக பதவியில் இருந்து விலகி விட்டார். எனினும் ஜோஷ்னா சின்னப்பா, செளரவ் கோஷல், தீபிகா பல்லிக்கல் உள்ளிட்டோர் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று வந்தனர். மேலும் ஜகார்த்தா ஆசியப் போட்டியிலும் ஒரு வெள்ளி உள்பட 5 பதக்கங்களை தாங்களாகவே கைப்பற்றினர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முழு நேர பயிற்சியாளர் இல்லாமையால் வீரர், வீராங்கனைகள் தவித்து வருகின்றனர். மூத்த வீரர், வீராங்கனைகள் சொந்த செலவிலேயே தனிப்பட்ட நபர்களிடம் பயிற்சி பெற்று வருவதும் வழக்கமாக உள்ளது. ஆனால் பணவசதி இல்லாதோர், ஜூனியர் பிரிவு வீரர்கள் இதனால் உரிய பயிற்சி இன்றி பாதிப்படைந்து வருகின்றனர்.
குறுகிய கால பயிற்சியாளர்கள்: இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் பொதுச் செயலாளர் சைரஸ் போன்சா கூறியதாவது:
முழு நேர பயிற்சியாளர்களை நியமிப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. இதனால் தான் போட்டிகளுக்கு தக்கவாறு குறுகிய காலத்துக்கு ஏற்ப பயிற்சியாளர்களை நியமிக்க உள்ளோம். குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் உலக சாம்பியன் போட்டி வாஷிங்டனில் நடக்கவுள்ள நிலையில், டேவிட் பால்மர் பயிற்சி அளிக்க உள்ளார். ஒரு மாதம் அவர் நமது அணியினருக்கு பயிற்சி தருவார். போட்டிகளுக்கு ஏற்றவாறு பயிற்சியாளர்களை தேர்வு செய்வது நமது வீரர்கள் மிகுந்த பயனைத் தரும். அடுத்த மாதம் நடக்கவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக சிறந்த பயிற்சியாளரான அமீர் வாஜிக்கையும் பயிற்சி அளிக்க கேட்டுள்ளோம் என்றார்.
இதுதொடர்பாக ஜோஷ்னா சின்னப்பா கூறியதாவது: 
முழு நேர பயிற்சியாளர் இருந்தால், அணிக்கு மிகவும் பயனாக இருக்கும். இங்கிலாந்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் உள்ளார். எனினும், முழுநேர பயிற்சியாளர் அவசியம் தேவை. டேவிட் பால்மரிடம் நானும் ஆலோசனை பெற தயாராக உள்ளேன் என்றார்.
ஏற்கெனவே நட்சத்திர வீராங்கனை தீபிகா பல்லிக்கலும் முழு நேர பயிற்சியாளரை விரைவில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com