தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் 1 இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.
தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் 1 இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
விசாகப்பட்டினம், புணேயில் நடைபெற்ற டெஸ்ட்களை இந்தியா ஏற்கெனவே வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றி விட்டது.
இதன் தொடர்ச்சியாக 3-ஆவது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வந்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 497-9 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. ரோஹித் சர்மாக அபாரமாக ஆடி தனது முதல் இரட்டை சதத்தை 212 பதிவு செய்தார். ரஹானேயும் 115 ரன்களுடன் சதமடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
200 ரன்களுக்கு குறைவாக பெற்றதால், பாலோ ஆனை தொடருமாறு கோலி அழைத்தார். இதைத் தொடர்ந்து மூன்றாவது நாளான திங்கள்கிழமை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்களால் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் டி புருயன் 30, நார்ட்ஜே 5 ரன்களுடன் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை களமிறங்கினர்.
தென்னாப்பிரிக்கா 133 ஆல் அவுட்: 2 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டது. பின்னர் ஷாபாஸ் நதீம் பந்துவீச்சில் டி புருயன் 30 ரன்களுடன் சாஹாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அடுத்து ஆட வந்த லுங்கி நிகிடியும் ரன் ஏதும் எடுக்காமல், நதீமிடமே கேட்ச் தந்து வெளியேறினார்.
48 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது தென்னாப்பிரிக்கா.
இந்திய தரப்பில் முகமது ஷமி 3-10, உமேஷ் 2-36, ஷாபாஸ் நதீம் 2-18, விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மூன்றாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார  வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என தொடரையும் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.
தொடர் நாயகன், ஆட்ட நாயகன் ரோஹித்: ஆட்ட நாயகன், தொடர் நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

தொடக்க வீரராக வாய்ப்பு தந்ததற்கு நன்றி: ரோஹித் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைப் பெற்ற ரோஹித் சர்மா கூறியதாவது: தொடக்க வீரராக களமிறக்கியதற்கு கேப்டன் கோலி, பயிற்சியாளர் சாஸ்திரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொடரில் புதிய பந்தை எவ்வாறு எதிர்கொள்வது என அறிந்து கொண்டேன். புதிய பந்து எங்குமே அபாயமாக தான் இருக்கும். கடந்த 2013 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கினேன். இன்னிங்ஸ் தொடக்கத்தில் கட்டுப்பாட்டுடன் ஆட வேண்டும். நம்பிக்கை வந்தவுடன் நிலைத்து ஆடலாம். அணி நிர்வாகத்தின் ஆதரவு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. வித்தியாசமான டெஸ்ட் ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை பெற்றது தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. எனக்கு நானே இதுதொடர்பாக பேசிக் கொண்டேன் என்றார் ரோஹித்.
ரவிசாஸ்திரி: எந்த பிட்சாக இருந்தாலும் முழுமையாக 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ரஹானே மீண்டும் தனது பார்முக்கு திரும்பி விட்டார். ரோஹித் தொடக்கத்தில் இருந்து சில மணி நேரங்கள் நிலைத்து ஆடினார். இதனால் பின்னர் அவர் நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். லெக் ஸ்பின்னர் நதீம் பந்துவீசியது மிகவும் சிறப்பாக இருந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் அவர் பந்துவீசிநார். கேப்டன் கோலி, புஜாரா, ஜடேஜா போன்றவர்கள் அணிக்கு பக்கபலமாக இருந்தனர். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஒயிட்வாஷ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது. மேலும் உள்ளூரில் நடைபெற்ற 32 ஆட்டங்களில் இது 26-ஆவது வெற்றியாகும். 
மேலும் தென்னாப்பிரிக்கா-இந்திய அணிகள் இடையிலான இருதரப்பு தொடர்களில் டெஸ்ட் தொடரில் 529 ரன்களை குவித்து வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா. கடந்த 2010-11 இரு தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜேக்ஸ் காலிஸ் 498 ரன்களை விளாசினார். 2009-10-இல் ஆம்லா 490 ரன்களையும், 1996-97-இல் அஸாருதீன் 388 ரன்களையும் விளாசினர்.

240 புள்ளிகளுடன் முதலிடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் பட்டியலில் 240 புள்ளிகளுடன் இந்தியா எட்ட முடியாத முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளது. 5 டெஸ்ட் ஆட்டங்களில் 240 புள்ளிகளை குவித்துள்ளது இந்தியா. நியூஸிலாந்து, இலங்கை அணிகள் 60 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன. அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக வங்கதேசத்துடன் 2 டெஸ்ட் தொடரில் ஆடுகிறது இந்தியா.

நிரந்தரமாக டெஸ்ட் ஆடும் 5 மைதானங்கள் தேவை
டெஸ்ட் ஆட்டங்களை ஆடுவதற்கென்றே 5 நிரந்தர மைதானங்களை பிசிசிஐ ஏற்படுத்த வேண்டும் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ளதைப் போன்று நிரந்தரமாக டெஸ்ட் ஆட்டங்கள் ஆடும் 5 மைதானங்களை ஏற்படுத்த வேண்டும்.
பிசிசிஐ தற்போது சுழற்சி முறையில் 15 மைதானங்களில் டெஸ்ட் ஆட்டங்களை நடத்தி வருகிறது. டி20, ஒருநாள் ஆட்டங்களுக்கு இது ஒத்துவரும். டெஸ்ட் அணிகள் ஆடும் போது, நிரந்தர மைதானங்கள் தேவை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com