பிசிசிஐ அமைப்பின் 39-ஆவது தலைவராக சௌரவ் கங்குலி பதவியேற்பு

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 39-ஆவது தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி (47) பதவியேற்றார்.
பிசிசிஐ அமைப்பின் 39-ஆவது தலைவராக சௌரவ் கங்குலி பதவியேற்பு


இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 39-ஆவது தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி (47) பதவியேற்றார்.
பிசிசிஐ பொது குழுக் கூட்டம், மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, அவர் முறைப்படி பிசிசிஐ தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த 33 மாதங்களாக பிசிசிஐ அமைப்பை நிர்வகித்து வந்த நிர்வாகக் குழுவின் பணி முடிவுக்கு வந்தது.
அந்த அமைப்பின் துணைத் தலைவராக உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா, பொருளாளராக பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்குரின் சகோதரர் அருண் தமால், செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இணைச் செயலராக கேரளத்தைச் சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ் பொறுப்பேற்றார்.
பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கங்குலி கூறியதாவது: ஊழலின்றி, நம்பகத்தன்மையுடன் பிசிசிஐ அமைப்பு வழிநடத்தப்படும். இந்திய அணியை கேப்டனாக எவ்வாறு வழிநடத்தினேனோ அதே வகையில் பிசிசிஐ அமைப்பையும் வழிநடத்துவேன். 
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மிக முக்கியமானவர். அவரது கருத்துகளைக் கேட்டறிவோம். கோலியை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளேன். அவருக்கு பிசிசிஐ-யின் ஆதரவு எப்போதும் இருக்கும். கேப்டனாக பொறுப்பேற்றபோது நான் சவால்களை எதிர்கொண்டது போல், இப்போதும் சில சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன்.
பிசிசிஐ அமைப்பை சீர்திருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. இரட்டை ஆதாயப் பதவி வகிக்கும் விவகாரம் பிரச்னையாக இருந்து வருகிறது. கிரிக்கெட் நிர்வாகக் குழுவை ஏற்படுத்த வேண்டியுள்ளது. 
அந்தக் குழு, இந்தப் பிரச்னை வராமல் தடுக்கும் பணியில் ஈடுபடும். உள்ளூர் கிரிக்கெட்டையும் மேம்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.
முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சாம்பியன்கள் கூடிய சீக்கிரம் ஓய்வு பெற மாட்டார்கள். பிசிசிஐ தலைவர் பொறுப்பில் நான் நீடிக்கும் வரை அனைத்து வீரர்களுக்கும் உரிய மரியாதை கொடுப்பேன். எம்.எஸ். தோனிக்காக இந்தியா பெறுமை கொள்கிறது என்றார். 
மேலும், வங்கதேசத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம்  மேற்கொள்ள அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா ஒப்புதல் அளித்துவிட்டார். 
வங்கதேசத்தில் விளையாட்டு வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அந்நாட்டின் உள்விவகாரம் ஆகும் என்றார்.  9 மாதங்களில் கங்குலியின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. சௌரவ் கங்குலியைக் காட்டிலும் பிசிசிஐ அமைப்புக்கு சிறந்த தலைவர் வேறு யாரும் இருக்க முடியாது என்று பிசிசிஐ நிர்வாககக் குழுத் தலைவராக இருந்த வினோத் ராய் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com