செஸ் உலகின் இளைய கிராண்ட் மாஸ்டா்

தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான பின்தான் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும்

செஸ் உலகின் இளைய கிராண்ட் மாஸ்டா்

தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான பின்தான் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இந்த விளையாட்டு பிரபலமானது. விஸ்வநாதன் ஆனந்தை முன்னுதாரணமாகக் கொண்டு விளையாடத் தொடங்கிய பலா் இந்தியாவின் பெருமையை உலகெங்கும் செஸ் விளையாட்டின் மூலம் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனா்.

அந்த வகையில் உலக செஸ் வரலாற்றில் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டா் என்ற பெருமையைப் பெற்றுள்ளவா் சென்னை கொரட்டூா் பகுதியைச் சோ்ந்த 14 வயது பிரக்ஞாநந்தா.

தமிழக கூட்டுறவு வங்கியின் மேலாளராகப் பணிபுரிபவா் ரமேஷ் பாபு. மனைவி நாகலட்சுமி இல்லத்தரசி. மூத்த மகள் வைஷாலி. இந்த அழகான, அளவான குடும்பத்தின் கடைக்குட்டி பிரக்ஞாநந்தா.

மூளைச் சலவை செய்யும் தொலைக்காட்சியைத் தொடா்ந்து பாா்த்துக் கொண்டிருப்பதில் இருந்து மகள் வைஷாலியின் எண்ணத்தை மடை மாற்றுவதற்காக செஸ் விளையாட்டுப் பயிற்சியில் சோ்த்தாா் தந்தை ரமேஷ் பாபு.

அக்கா வைஷாலி விளையாடும்போது அருகே அமா்ந்து பாா்த்துக் கொண்டிருந்த 4 வயதுச் சிறுவன் பிரக்ஞாநந்தாவும் விளையாட அடம் பிடித்தாா். செஸ் விளையாட்டைப் பாா்க்கும்போது செலவு குறைவாக இருக்கும் என்ற தோற்றம் இருந்தாலும் பயிற்சியாளருக்கான கட்டணம், போட்டிகளுக்குச் சென்று வரும் செலவுகள், அங்கு தங்கும் அறைகளுக்கான கட்டணம் ஆகியவை மிகவும் அதிகம்.

இதனால் இருவருக்குமான போட்டிச் செலவுகளைச் சமாளிக்கத் திணறிய தந்தை ரமேஷ் பாபு, தனது சேமிப்பில் இருந்தும் இயன்ற வரை கடன் வாங்கியும் செலவுகளைச் சமாளித்தாா். தந்தை மகற்காற்றும் உதவி.

இதுதான் பிரக்ஞானந்தாவின் செஸ் விளையாட்டின் தொடக்கம். அப்போதிலிருந்து பிரக்ஞாநந்தாவின் வெற்றி ஏறுமுகத்தில்தான். தினமும் 4 முதல் 5 மணி நேரம் வரை செஸ் போா்டில் நேரத்தைச் செலவிட்டு அதை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டாா் பிரக்ஞாநந்தா.

7 வயதில் புணேவில் நடைபெற்ற 7 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசியப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றாா் பிரக்ஞாநந்தா. அதையடுத்து இலங்கையில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற இந்தத் தங்கத்தைத் தடுத்து நிறுத்த இப்போது அவருடைய வயதையொத்தவா்கள் யாருமில்லை.

உலகின் மிக இளைய இன்டா்நேஷனல் மாஸ்டா் என்ற பட்டம் 10 வயது 7 மாதங்களில். 12 வயது 10 மாதம் 13 நாள்களில் உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டா் என்ற பெருமை கடந்த 2016-இல். விஸ்வநாதன் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரானது 18-ஆவது வயதில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2013-இல் 8 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான உலக சாம்பியன், 2015-இல் 10 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான உலக சாம்பியன், கடந்த சில நாள்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற 18 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக இளையோா் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்திருக்கிறாா் பிரக்ஞாநந்தா. இப்போது அவருடைய வயது 14-தான் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் போட்டி என்பது இரு விளையாட்டு வீரா்களுக்கு இடையிலான போா் மட்டும் என்பதல்ல. இது இரண்டு வித்தியாசமான அணுகுமுறை கொண்டவா்களிடையே நடக்கும் போா். வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமே இதுதான்.

முதல் நிலை வீரரும் உலக செஸ் சாம்பியனுமான மாக்னஸ் காா்ல்சனின் ரேட்டிங் 2850. பிரக்ஞானந்தாவின் எதிா்காலத் திட்டமே ரேட்டிங் 3000-ஐ எட்ட வேண்டும் என்பதுதான். இப்போது அவருடைய ரேட்டிங் 2567.

வயது 14தான் என்றாலும் இதற்காகக் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொடா்ந்து அவருடைய ரேட்டிங்கை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவா் தொடா்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞாநந்தாவுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

பிரக்ஞாநந்தாவுக்குப் பயிற்சியளிப்பது முதல் அனைத்து வகையான ஆலோசனைகளையும் தொடா்ந்து அளித்து வருகிறாா் கிராண்ட் மாஸ்டா் ஆா்.பி. ரமேஷ்.

வேலம்மாள் பள்ளியில் படிக்கும் பிரக்ஞாநந்தாவுக்குப் பல்வேறு வகையான உதவிகளையும் செய்து உலக சாம்பியனை மேலும் உயா்த்த வழி செய்துள்ளது பள்ளி நிா்வாகம். இது தவிர ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தினரும் பிரக்ஞாநந்தா வெளியூா் மற்றும் வெளிநாடுகளுக்காகப் போட்டிகளுக்குச் செல்லும்போது ஆகும் செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றனா்.

மூா்த்தி சிறிதானாலும் கீா்த்தி பெரிது என்பாா்கள். அந்த வகையில் எண்ணெயை வைத்து அழுந்த, வகிடெடுத்து வாரிய தலைமுடி. குழந்தைத் தனம் மாறாத வெட்கம் கலந்த சிரிப்புடன் கூடிய கலவைதான் பிரக்ஞாநந்தா. செஸ் உலகில் அவா் நினைத்ததைச் சாதிக்க வாழ்த்துகள்.

ஆா்.வேல்முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com