உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 120 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்

மே.இ.தீவுகளை 2-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்ததின் மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.
வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணியினர்.
வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணியினர்.


மே.இ.தீவுகளை 2-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்ததின் மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 9 நாடுகளின் அணிகள் பங்கேற்போடு நடைபெற்று வருகிறது.
மொத்தம் 72 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதன் இறுதி ஆட்டம் 2022-இல் நடைபெறவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மே.இ.தீவுகளில் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் ஆட்டத்தில் 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் கிங்ஸ்டன் சபீனா பார்க்கில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி அபாரமாக ஆடி 257 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தி 2-0 என தொடரையும் கைப்பற்றியது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களுக்கும், மே.இ.தீவுகள் 117 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. இந்திய அணியில் ஹனுமா விஹாரி 111 ரன்களையும், கோலி 76, மயங்க் அகர்வால் 55, இஷாந்த் 57 ரன்களையும் விளாசினர். 
மே.இ.தீவுகள் தரப்பில் ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டை சாய்த்தார். மே.இ.தீவுகள் அணியில் ஷிம்ரன் ஹெட்மயர் மட்டுமே 34 ரன்களை எடுத்தார். பும்ரா ஹாட்ரிக் சாதனையோடு 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பாலோ ஆனை வலியுறுத்தாமல் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி 168 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. 
ரஹானே 64, ஹனுமா 4விஹாரி 53 ரன்களை விளாசினர். மே.இ.தீவுகள் தரப்பில் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
468 ரன்கள் வெற்றி இலக்கு: பின்னர் 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த. மே.இ.தீவுகளால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டாயினர். அதிகபட்சமாக ஷமார் புருக்ஸ் 50, ஹோல்டர் 39 ரன்களை சேர்த்தனர். இந்திய தரப்பில் ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.
120 புள்ளிகள்: 2 ஆட்டங்களையும் வென்றதால், இந்திய அணிக்கு 120 புள்ளிகள் முழுமையாக வழங்கப்பட்டன. 
தலா ஒரு ஆட்டத்துக்கு 60 புள்ளிகள் வீதம் மொத்தம் 120 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பெற்றது. நியூஸிலாந்து, இலங்கை 2 டெஸ்ட் தொடரில் தலா 1 வெற்றியுடன் 60 புள்ளிகளை பெற்றுள்ளன.
அதே நேரத்தில் 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை தலா 1 வெற்றியுடன் 32 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

கேப்டன் என்பது வெறும் அடையாளம், அணியின் ஒட்டுமொத்த முயற்சியால் வெற்றி: விராட் கோலி
 கேப்டன் பதவி என்பது வெறும் அடையாளம் மட்டுமே. அணியின் ஒட்டுமொத்த முயற்சியால் தான் மே.இ.தீவுகளுடன் தொடரை கைப்பற்றினோம். குறிப்பாக ஹனுமா விஹாரி இந்த ஆட்டத்தின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். 


உறுதி, திட்டமிட்டலோடு ஆடியதால் இந்த வெற்றி கிட்டியது. அற்புதமான ஆட்டத்தால், விஹாரி ஜொலித்தார். தனது தவறுகளில் இருந்து பாடம் கற்க விரும்புகிறார். எனது கேப்டன் பதவி என்பது வெறும் அடையாளம் தான். அணியே ஒட்டுமொத்தமாக இணைந்து செயல்படுகிறது. நமது பவுலர்கள் இல்லையென்றால், எதையும் சாதிக்க முடியாது. ஷமி, பும்ரா, இஷாந்த் ஆகியோர் நடுநாயகமாக திகழ்கின்றனர். முன்பு என்ன நடந்ததோ அதை மறந்து விடலாம். சிறந்த கிரிக்கெட்டை ஆடுவதை முக்கியம் என்றார்.

தோனியை முந்தினார் விராட் கோலி 
அதிக டெஸ்ட் வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற வகையில் தோனியின் சாதனையை தகர்த்தார் விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் அதிக ஆட்டங்களில் வென்றவர் என்ற சாதனை எம்.எஸ். தோனி வசம் இருந்தது. அவரது தலைமையில் 60 ஆட்டங்களில் 27 ஆட்டங்களில் இந்தியா வென்றது. 18-இல் தோல்வி, 15-இல் டிராவும் கண்டது. அதே நேரம் கோலி தலைமையில் ஆடிய 48 ஆட்டங்களில் 28 ஆட்டங்களில் வெற்றியும், 10இல் தோல்வியும், 10-இல் டிராவும் கண்டது இந்தியா.
மேலும் வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டங்களில் 13-இல் வெற்றியுடன் சாதனையை தன் வசம் வைத்துள்ளார் கோலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com