ஸ்டீவ் ஸ்மித் இரட்டைச் சதம்: முதல் இன்னிங்ஸில் ஆஸி., 497 ரன்கள் குவிப்பு

4-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார இரட்டைச் சதத்தால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் எடுத்துள்ளது.
இரட்டைச் சதம் அடித்த மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித்.
இரட்டைச் சதம் அடித்த மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித்.


4-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார இரட்டைச் சதத்தால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளியின்போது 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

மேலும் படிக்க: ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா - 170/3

இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் 2-ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக 1 ரன் மட்டுமே சேர்த்த நிலையில் ஹெட் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேடும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித்துடன் கேப்டன் பெயின் இணைந்தார். விக்கெட்டுகள் விழந்தபோதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீவ் ஸ்மித் இந்த தொடரில் மீண்டும் சதத்தை எட்டினார். சதம் அடித்தும் அவர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கேப்டன் பெயின் அவருக்கு ஒத்துழைப்பு தந்தார்.

 

இந்த இணையைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினார்கள். இதன்மூலம், இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது. கேப்டன் பெயினும் அரைசதம் அடித்தார். 

இந்நிலையில், 58 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் பெயின், ஓவர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பாட் கம்மின்ஸும் 4 ரன்களுக்கு லீச் சுழலில் சிக்கினார். 

எனவே, ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் 150 ரன்களைக் கடந்து துரிதமாக விளையாடி வந்தார். இதனால், மறுமுனையில் ஸ்டார்க் நிதானம் காட்டினார். இதனால், ஆஸ்திரேலியாவும் 400 ரன்களை எட்டியது. பவுண்டரிகளாக அடித்து வந்த ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் அரங்கில் தனது 3-வது இரட்டைச் சதத்தை எட்டினார். இரட்டைச் சதம் அடித்த ஸ்மித் கூடுதலாக 11 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். 319 பந்துகளை எதிர்கொண்ட அவர் 24 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 211 ரன்கள் எடுத்தார்.

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டுக்குப் பிறகு அடக்கி வாசித்து வந்த ஸ்டார்க், அதன்பிறகு பவுண்டரிகளில் ரன் குவிக்கத் தொடங்கினார். இங்கிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாத வகையில், இந்த இணையில் ஸ்டார்க் மற்றும் நாதன் லயான் அடித்த சில பந்துகள் பீல்டர்களுக்கு நடுவே விழுந்து அந்த அணியை சோதித்தது. எனவே, ஆஸ்திரேலிய அணி 450 ரன்களைக் கடந்தும் துரிதமாக பயணித்தது. மிட்செல் ஸ்டார்க்கும் அரைசதத்தை எட்டினார். 

இதனால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 497 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் பெயின் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் எடுத்தது. மிட்செல் ஸ்டார்க் 54 ரன்களுடனும், நாதன் லயான் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில், பிராட் 3 விக்கெட்டுகளையும், ஜேக் லீச் மற்றும் கிரெய்க் ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

2-வது நாள் ஆட்டநேர முடிவுக்கு 14 ஓவர்கள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது.

முன்னதாக, ஸ்டீவ் ஸ்மித் 118 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜேக் லீச் பந்துவீச்சில் ஸ்லிப் திசையில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆனார். ஆனால், ரீபிளேவில் அது நோ பால் என கண்டறியப்பட்டதால் ஸ்மித் தப்பித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com