உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே நோக்கம்: கார்பந்தய சாம்பியன் கெளரவ் கில்

நாட்டுக்காக உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே நோக்கம் என கார்பந்தய சாம்பியன் கெளரவ் கில் கூறியுள்ளார்.
உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே நோக்கம்: கார்பந்தய சாம்பியன் கெளரவ் கில்


நாட்டுக்காக உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே நோக்கம் என கார்பந்தய சாம்பியன் கெளரவ் கில் கூறியுள்ளார்.
சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதையும் வென்ற முதல் கார்பந்தய வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
கார் பந்தயம் என்றாலே நமது நாட்டில் நினைவுக்கு வருபவர் நரேன் கார்த்திகேயன். அவர் தான் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் வீரர் ஆவார். கோவையைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.  அவருக்கு அடுத்து கருண் சந்தோக் இதில் தனித்தன்மையுடன் திகழ்ந்தார்.
இந்நிலையில் அவர்களுக்கு பின் கெளரவ் கில் சிறந்த கார் பந்தய வீரராக திகழ்கிறார். கடந்த 1981 டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி பிறந்த கெளரவ் கில், தொடக்கத்தில் மோட்டார் பைக் பந்தய வீரராக திகழ்ந்த கில், தேசிய மோட்டார்காஸ் பந்தயத்திலும் (1999) பங்கேற்று நிறைவு செய்தார்.
கார் பந்தயத்தில் கவனம்: இதன் தொடர்ச்சியாக கார் பந்தயத்தில் கவனத்தை திருப்பிய கில், போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த 2000-இல் ரெட்டு இ ஹிமாலயா என்ற அணியில் சேர்ந்து பங்கேற்றார். 2003-இல் தேசிய ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் என்ஆர்ஆர்சி போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். 2004-இல் முதலிடத்தைப் பெற்ற கில், 2006 சீசனில் இரண்டாம் இடத்தோடு நிறைவு செய்தார். இதற்கிடையே 2007-இல் எம்ஆர்எப் நிறுவனத்துடன் இணைந்த அவர், தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.  6 முறை இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார் கில். 
ஆசிய பசிபிக் சாம்பியன்:  2013-இல் ஆசிய பசிபிக் பந்தய போட்டியில் பங்கேற்று முதன்முறையாக 2014-இல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் கில்.  3 முறை ஆசிய பசிபிக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் கில். மேலும் 5 முறை உலக கார்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ள கில், தற்போது ஜேகே டயர்ஸ் அணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.  2016, 2017, 2018 என தொடர்ந்து ஹாட்ரிக் ஆசிய பட்டத்தை வென்றார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2018 உலக போட்டியில் 4 சுற்றுகளில் பங்கேற்றார் கில். 
அர்ஜுனா விருது: கார் பந்தயங்களில் கெளரவ் கில்லின் அபாரமான செயல்பாட்டைக் கண்டு மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருதை வழங்கி கெளரவித்தது. இந்த விருது பெறும் முதல் கார் பந்தய வீரர் என்ற சிறப்பையும் கெளரவ் பெற்றார். கடந்த 3 ஆண்டுகளாக கில்லின் பெயரை அர்ஜுனா விருதுக்கு மோட்டார் ஸ்போட்ஸ் கிளப் அமைப்பு பரிந்துரைத்து வந்தது.
நிகழாண்டு 3 சுற்றுகளில் பங்கேற்பு: நிகழாண்டு 2019-இல் ரேலி டர்க்கி, வேல்ஸ் ரேலி ஜிபி, ரேலி ஆஸ்திரேலியா உலக சாம்பியன் போட்டி 3 சுற்றுகளில் கலந்து கொள்கிறார் கெளரவ்.  வரும் 12 முதல் 15-ஆம் தேதி வரை துருக்கியில் நடைபெறவுள்ள எஃப்ஐஏ உலக ரேலி சாம்பியன் போட்டி-2 கலந்து கொள்கிறார். அதில்  1.6 டர்போ ஆர்5 - ஐ ஓட்டுவார். 
இதுதொடர்பாக கெளரவ் கில் கூறியதாவது:
நாட்டுக்காக உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே எனது நோக்கம். அர்ஜூனா விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கார்பந்தய வீரர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது, இந்தியாவில் கார் பந்தயம் குறித்து விழிப்புணர்வை அதிகப்படுத்தும். ஆஸ்திரேலியாவில் கடந்த முறை வெற்றிக்கு அருகில் வந்து வாய்ப்பை இழந்தேன். போட்டியில் முன்னிலையில் இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் பின்னுக்கு தள்ளப்பட்டேன்.
மோட்டார் பந்தயத்தை மேலும் பிரபலப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன். எனது பயிற்சி அகாதெமி மூலமும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். எனது சக டிரைவர் ஆஸி.யின் மெக்நீல் 11 ஆண்டுகளாக என்னுடன் உள்ளார். புதிய கார் தருவிக்கப்பட்டுள்ளதால் நம்பிக்கையுடன் உள்ளேன்.
மற்ற நாடுகளில் கார்பந்தயத்துக்கு பெரும் தொகை செலவிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் நிலைமை மாறுபடுகிறது. கிடைக்கும் குறைந்த நிதியாதாரத்தில் நான் போட்டிகளில் பங்கேற்கிறேன்.
துருக்கி நாடு புதிதாக போட்டியை நடத்துகிறது. கடினமான நிலப்பரப்பில் போட்டி நடத்தப்படும் என்றார் கில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com