யுஎஸ் ஓபன்: சாம்பியன் பியான்கா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ஜாம்பவான் செரீனாவை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார் கனடாவின் 19 வயது இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு.
யுஎஸ் ஓபன்: சாம்பியன் பியான்கா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ஜாம்பவான் செரீனாவை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார் கனடாவின் 19 வயது இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு.

இந்த சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர்  ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்பில் செரீனா வில்லியம்ஸ் கனடாவின் இளம் வீராங்கனை பியான்காவை எதிர்கொண்டார். முதல் இறுதி ஆட்டத்தில் ஆடுகிறோம் என்ற எந்த பதற்றமும் இல்லாமல் ஆடினார் பியான்கா. தொடக்கத்தில் செரீனா தனது அனுபவத்தை கொண்டு புள்ளிகளை குவிக்க முயன்றார். ஆனால் அதை முறியடித்தார் பியான்கா.

முதல் செட்டில் செரீனா சர்வீஸ் கேமை தவற விட்டு இரட்டை தவறுகள் புரிந்ததால் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார் பியான்கா. இரண்டாவது செட்டில் 5-1 என அவர் முன்னிலை பெற்ற போதிலும், டைபிரேக்கர் வரை சென்றது. செரீனா புள்ளி எடுக்க வாய்ப்பு தராமல் 7-5 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார் பியான்கா.

இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இந்த சீசனில் இந்தியன் வெல்ஸ், டொரண்டோ டபிள்யுடிபி பட்டங்களை வென்றார். இந்த வெற்றி மூலம் பியான் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முன்னேறுவார் எனத் தெரிகிறது.

சிறப்புகள்

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் கனடா வீராங்கனை. கடந்த 2006-இல் யுஎஸ் ஓபனில் பட்டம் வென்ற இளம் வீராங்கனை மரியா ஷரபோவா. அதன் பின் 13 ஆண்டுகள் கழித்து பட்டம் வென்ற இளம் வீராங்கனை ஆகிறார் பியான்கா. மேலும் 2000-ஆம் ஆண்டுகளில் பிறந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் பெறுகிறார்.

கடந்த 2 ஆண்டுகள் யுஎஸ் ஓபனில் பிரதான சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை பியான்கா என்பது குறிப்பிடத்தக்கது.

எனது ஆட்டம் மன்னிக்க முடியாதது

இறுதிச் சுற்றில் எனது ஆட்டம் மன்னிக்க முடியாதது. 9 ஏஸ் சர்வீஸ்களை போட்டும். 8 இரட்டை தவறுகள், 44 சதவீதம் மட்டுமே சர்வீஸ்களை எதிர்கொண்டது பாதகமாகி விட்டது. 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் போல் எப்போது நான் ஆடுவேன் எனத் தெரியவில்லை. பியான்கா பிறப்பதற்கு 9 மாதங்கள் முன்பு 1999-இல் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றேன் நான். பியான்காவை நேசிக்கிறேன். சிறப்பாக ஆடினார். இந்த போட்டியில் இந்த ஆட்டம் தான் மிகவும் மோசமானதாக கருதுகிறேன் என்றார் செரீனா. 

எட்டாக்கனியாக உள்ள 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்

23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜாம்பவான் செரீனாவுக்கு சோகம் தொடருகிறது. மார்கரெட் கோர்ட்டின் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சமன் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2018 யுஎஸ் ஓபன் போட்டி இறுதிச் சுற்றிலும் ஜப்பான் வீராங்கனை ஒஸாகாவிடம் அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறினார் செரீனா. தற்போது கனடாவின் பியான்காவிடம் தோற்றுள்ளார். இது செரீனா தகுதி பெற்ற 33-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றாகும்.

உங்கள் கனவுகளை நனவாக்க போராடுங்கள்

உங்கள் கனவுகளை நனவாக்க போராட வேண்டும். கடந்த 2018 யுஎஸ் ஓபன் போட்டியில் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினேன். முதல் 200 இடங்களுக்கு வெளியே இருந்தேன். மேலும் காயமடைந்த வீட்டில் அமர்ந்து எனது நிலை குறித்து வேதனைப்பட்டேன். அனைத்து நேரங்களிலும் நமக்கு ஏற்றமே கிடைக்காது.

நம்மால் என்ன முடியும் என்பதை அறிந்து அதை அடைய முழுமுயற்சியுடன் செயல்பட வேண்டும்.

நல்ல நேரம் நமக்கு வரும் என நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

ரூ.27.6 கோடி

பியான்காவுக்கு ரூ.27.6 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெற்ற
செரீனாவுக்கு ரூ.13.6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com