கடும் போராட்டத்துக்குப் பின் நடால் சாம்பியன்

யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷிய வீரர் மெத்வதேவிடம் போராடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால்.
கடும் போராட்டத்துக்குப் பின் நடால் சாம்பியன்


யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷிய வீரர் மெத்வதேவிடம் போராடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால். இது அவர் வெல்லும் 4-ஆவது யுஎஸ் ஓபன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக கைப்பற்றிய 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
நியூயார்க்கில் திங்கள்கிழமை அதிகாலை இருவர் இடையே நடைபெற்ற இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக அமைந்தது. 33 வயது அனுபவ வீரரான நடால், தனது முழு திறமையையும் பயன்படுத்தி முதலிரண்டு செட்களையும் 7-5, 6-3 என வென்றார். காலிறுதி, அரையிறுதியில் எளிதாக வென்ற நடால், மூன்றாவது நான்காவது செட்களில் திணற வேண்டியிருந்தது.
மெத்வதேவ் அபார ஆட்டம்: 23 வயதான மெத்வதேவ் அதன் பின் வீறு கொண்டு எழுந்தார். அவரது அபார ஆட்டத்தால் 5-7, 4-6 என்ற செட்களை இழந்தார் நடால். கடைசி 5-ஆவது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்த நிலையில், நடால் தனக்கு கிடைத்த 3 பிரேக் புள்ளிகளை பயன்படுத்தி 6-4 என வெற்றி பெற்றார்.
இந்த ஆட்டம் மொத்தம் நான்கு மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது.
முதல் செட்டில் நடாலுக்கு சவால் விடும் வகையில் மெத்வதேவ் ஆடினாலும், அனுபவத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றார்.

ஓரே பட்டம் தேவை பெடரர் சாதனையை சமன் செய்ய நடாலுக்கு ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை சமன் செய்ய நடாலுக்கு இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் தேவைப்படுகிறது.

 இறுதி ஆட்ட சிறப்பு அம்சங்கள்
இது நடாலின் 27-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றாகும். கடந்த 1970-ஆம் ஆண்டு 35 வயதில் கென் ரோஸ்வால் யஎஸ் ஓபன் பட்டம் வென்றார். அவருக்கு பின் 33 வயதில் பட்டம் வென்ற மூத்த வீரர் ஆனார் நடால். 2019-இல் பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு பின் நடால் வெல்லும் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
யுஎஸ் ஓபன் போட்டியில் பெடரர், ஜிம்மி கானர்ஸ், பீட் சாம்ப்ராஸ் ஆகியோர் 5 முறை பட்டம் வென்றனர். நடால் தற்போது 4 முறை பட்டம் வென்றுள்ளார். கடந்த 2011-இல் டோஹா போட்டிக்கு பின் தொடர்ந்து 20-ஆவது முறையாக மெத்வதேவை வீழ்த்தியுள்ளார்.
இது மெத்வதேவ் தகுதி பெற்ற முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதி ஆட்டம்.

இந்த வெற்றி எனக்கு முக்கியமானது: நடால் கண்ணீர்
இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது என கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு நடால் கூறினார். ஏனென்றால் இந்த ஆட்டத்தில் மேலும் மேலும் சிரமமான நிலை ஏற்பட்டது. வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் உணர்ச்சிவசப்பட்டு ஆடினேன். சிறப்பான இறுதி ஆட்டமாக அமைந்த இதில் 23 வயது மெத்வதேவ், தீவிரமாக போராடி ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். அவருக்கு இதுபோன்ற மேலும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

நடாலுக்கு எதிராக ஆடுவது கடினமாக இருந்தது
நடாலுக்கு எதிரான ஆட்டம் மிகவும் கடினமாக இருந்தது. நரகத்தில் போராடுவது போல் உணர்ந்தேன். மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் 3-ஆவது செட்டின் போது எனக்கு தந்த ஊக்கத்தால் எழுச்சி பெற்று ஆடினேன். 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலுக்கு பாராட்டுகள். ஒவ்வொரு பந்துக்கும் போராட வேண்டியிருந்தது. உலகின் மிகப்பெரிய மைதானத்தில் ஆடியது பெருமையாக உள்ளது. நான் தவறுகள் செய்தேன். 
எனினும் என்னில் இருந்த ஆற்றலை ரசிகர்கள் தான் தூண்டி விட்டனர். இதற்காக நன்றி என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com