புயலை எதிர்கொண்ட இளம் தென்றல்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேசிய டென்னிஸ் மைதானத்தில் அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெறத் தயாராக இருந்தது.
புயலை எதிர்கொண்ட இளம் தென்றல்!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேசிய டென்னிஸ் மைதானத்தில் அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெறத் தயாராக இருந்தது.
19 வயது இளம் தென்றலான கனடாவின் பியான்கா ஆன்ட்ரிஸ்கு, டென்னிஸ் அரங்கில் அதிவேக புயல் என்றழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸை (37) எதிர்கொள்ள இருந்தார்.
செரீனாவை இந்த இளம் வீராங்கனையால் ஜெயித்துவிட முடியுமா? என்று சிலரும், யானைக்கும் அடி சறுக்கும்; செரீனாவை வீழ்த்திவிட முடியும் என்று சிலரும் யோசித்துக் கொண்டிருக்க தன்னால் புயலை எதிர்கொண்டு ஜெயித்துக் காட்ட முடியும் என்பதை நிரூபித்தார் பியான்கா.
கடந்த 1999ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் இதே அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார் செரீனா.
அதன் பிறகு, டென்னிஸ் அரங்கில் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்தார். தனது ஆக்ரோஷ ஆட்டத்துக்காக உலக அளவில் அதிக ரசிகர்களையும் கொண்டிருப்பவர். 1999ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் 23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் செரீனா.
ஆஸ்திரேலிய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்கரெட் கோர்ட், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவரது சாதனையை சமன் செய்ய செரீனாவுக்கு இன்னும் ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் வென்றால் போதும். இதற்கு முன்பு 6 முறை (1999, 2002, 2008, 2012, 2013, 2014) அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கிய செரீனாவுக்கு ஆட்டத்தின் முடிவில் முடிவில் ஏமாற்றமே மிஞ்சியது.
6-3, 7-4 என்ற செட் கணக்கில் செரீனா எனும் புயலை தடுமாறச் செய்தது பியான்கா எனும் இளம் தென்றல்.
ரசிகர்களின் செரீனா கோஷம் ஒரு பக்கம், செரீனாவின் அதிரடி ஷாட்கள் மறுபக்கம் என ஆட்டத்தின்போது பல சவால்கள் இருந்தாலும்  அதிக முறை தவறிழைக்காமல் ஆட்டத்தை மிக நேர்த்தியாக விளையாடினார் பியான்கா.
செரீனாதான் வெல்வார், வெல்ல வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்த உள்ளூர் ரசிகர்களுக்கு 1 மணி நேரம் 40 நிமிடத்தில் ஆட்டத்தை தனக்கு சாதகமாகக் கொண்டுவந்து அதிர்ச்சி அளித்த பியான்கா யார் என்று பார்ப்போம்.


2000-ஆவது ஆண்டு ஜூன் 16ஆம் தேதி கனடாவில் பிறந்தார் பியான்கா. இவரின் பெற்றோர் ருமேனியாவைச் சேர்ந்தவர்கள். தனது 7 வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையிலெடுத்த பியான்கா, 19 வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்றிருக்கிறார் என்றால் இவரது கடின பயிற்சியைக் கண்டு வியப்பே ஏற்படுகிறது !
சிறுமியாக இருந்தபோது, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை கிம் கிலிஜ்ஸ்டர்ஸை முன்மாதிரியாகக் கொண்ட பியான்காவுக்கு, வில்லியம்ஸ் சகோதரிகள் (வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ்) மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் ஆகியோர் பிடித்தமான டென்னிஸ் வீராங்கனைகள்.    
காலச்சக்கரத்தின் சுழற்சியில், தனக்கு பிடித்த செரீனாவையே எதிர்கொண்டு விளையாடி ஜெயிப்போம் என்று பியான்காவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அதுவும் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதி ஆட்டத்தில் என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும்.
டென்னிஸ் அரங்கில் பந்தை எப்படி எதிர்கொண்டு எதிராளிக்கு திருப்பி அடிக்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அதில் வித்தியாசத்தைக் காட்டினால் ஆட்டத்தின்போக்கு மாறுபடும் என்பதை தெரிந்து வைத்திருப்பவர் பியான்கா. மார்ட்டினா ஹிங்கிஸைப் போல பல்வேறு வகையான ஷாட்களைப் பயன்படுத்தி பந்தை எதிராளிக்கு திருப்புகிறார் என்று முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா, பியான்காவுக்கு புகழாரம் சூட்டியிருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டில் இந்தியன் வெல்ஸ் ஓபன், கனடா ஓபன் ஆகிய போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற பியான்கா, அமெரிக்க ஓபன் வெற்றி மூலம் சர்வதேச டென்னிஸ் மகளிர் பிரிவு ஒற்றையர் தரவரிசையில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்டின் தொடக்கத்தில் தரவரிசையில் 178ஆவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006ஆம் ஆண்டு, ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு பிறகு, கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் டீன் ஏஜ் வீராங்கனை என்ற சாதனையையும், கிராண்ட்ஸ்லாம் வென்ற கனடாவின் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் பியான்கா.
மனதை ஒருமுகப்படுத்த முடிந்தால், உங்களால் எந்த விஷயத்தையும் கட்டுப்படுத்த முடியும். ஆட்டத்தின்போது எனது மனதில் டென்னிஸ் மட்டுமே இருக்கும் என்று 12 வயது முதல் தியானப் பயிற்சியை மேற்கொண்டுவரும் பியான்கா கூறியது உண்மைதான் என்பது இந்த அதிரடி வெற்றியின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com