ஆதாயம் தரும் பதவி: கங்குலிக்குப் புதிய உத்தரவு!
By எழில் | Published On : 13th September 2019 03:47 PM | Last Updated : 13th September 2019 03:47 PM | அ+அ அ- |

ஐபிஎல் அல்லது பிசிசிஐ என இரண்டில் ஏதேனும் ஒரு பதவியை மட்டும் செளரவ் கங்குலி தேர்வு செய்யவேண்டும் என்று பிசிசிஐ நெறிமுறைகளுக்கான அதிகாரி கூறியுள்ளார்.
பிசிசிஐ-யின் கிரிக்கெட் அறிவுரைக் குழு (சிஏசி) உறுப்பினர்களாக கங்குலி மற்றும் லஷ்மண் அங்கம் வகிக்கின்றனர். அதேவேளையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கான ஆலோசகர்களாக முறையே லஷ்மண், கங்குலி பொறுப்பு வகிக்கின்றனர். ஒரே நேரத்தில் இவ்வாறு இரு பொறுப்புகளில் இருப்பது ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் அங்கம் வகிப்பதாக பார்க்கப்படுமென பிசிசிஐ கூறியுள்ளது. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் சச்சின், பிசிசிஐயின் கிரிக்கெட் அறிவுரைக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவர் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவிக்கான கேள்வி எழவில்லை. ஆனால், லஷ்மண் மற்றும் கங்குலி விவகாரத்தில் அத்தகைய கேள்வி எழுந்துள்ளது. எனவே, ஐபிஎல் அல்லது பிசிசிஐ அந்த இரண்டில் ஏதேனும் ஒரு பதவியை மட்டும் அவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்கிற நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ நெறிமுறைகளுக்கான அதிகாரி டி.கே.ஜெயின் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிசிசிஐ-யின் கிரிக்கெட் அறிவுரைக் குழுவில் உள்ள கங்குலி ஐபிஎல்-லிலும் பொறுப்பு வகிப்பது ஆதாயம் தருவதாக உள்ளது. இதுதொடர்பான கங்குலியின் விளக்கம், ராஜிநாமா அறிவிப்பாகவே கருதப்படும். எனவே ஐபிஎல் பொறுப்பில் உள்ள பதவி, 2019 மே மாதத்துடன் முடிவுக்கு வரவேண்டும். தற்போதைய நிலையில் ஆதாயம் தரும் பதவியை அவர் வகிப்பதாகவே உள்ளது. ஆதாயம் தரும் பதவியை விட்டு கங்குலி விலகவேண்டும். ஒரு பதவிக்கு மேல் அவர் பொறுப்பேற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.