புரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்

நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள புரோ கபடி லீக் போட்டியில் 1000 புள்ளிகளை குவித்த முதல் சாதனை வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் பாட்னா பைரேட்ஸ் கேப்டன் பர்தீப் நர்வால்.
புரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்

நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள புரோ கபடி லீக் போட்டியில் 1000 புள்ளிகளை குவித்த முதல் சாதனை வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் பாட்னா பைரேட்ஸ் கேப்டன் பர்தீப் நர்வால்.
கிரிக்கெட்டில் முதன்முறையாக இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி தொடங்கப்பட்டு அமோக வரவேற்பு பெற்றது. இதன் தொடர்ச்சியாக பாட்மிண்டன், மல்யுத்தம், வாலிபால், உள்பட பல்வேறு விளையாட்டுகளிலும் லீக் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பாரம்பரிய விளையாட்டான கபடியையும் மேம்படுத்த புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. தற்போது 7-ஆவது சீசனாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்த லீக் போட்டியில் 12 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இதற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டி வருகிறது.
அபாரமான வரவேற்பு: தற்போது 7-ஆவது சீசன் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. அக்டோபர் மாதம் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் ஆமதாபாதில் நடைபெறுகிறது. ஆசிய போட்டியில் தங்கம், உலகக் கோப்பை பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களும், பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் வெவ்வேறு அணிகளில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அஜய் தாகுர், பர்தீப் நர்வால், ரிஷாங் தேவதிகா, மொஹித் சில்லார், சுரேந்தர் நடா, தீபக் ஹூடா, ராகுல் செளஹான், ரோஹித் குமார், மஞ்சித் சில்லார், சந்தீப் நர்வால், மோனு கோயட் ஆகியோர் முக்கியமானவர்கள். ரைடர், டிபன்டர் என இவர்கள் வெவ்வேறு அணிகளில் இடம் பெற்று ஆடி வருகின்றனர்.
பாட்னா பைரேட்ஸ் அணி: பாட்னா பைரேட்ஸ் அணி கேப்டனாகத் திகழும் பர்தீப் நர்வால், ரைடராக உள்ளார்.
ஹரியாணா மாநிலம் சோனேபட்டைச் சேர்ந்த பர்தீப் நர்வால், 16.2.1997-இல் பிறந்தவர்.
ரைடரான பர்தீப் தனது அணி 3 முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். ரைடிங்கில் பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.
புரோ கபடி லீக் 2-ஆவது சீசன் முதல் ஆடி வருகிறார் பர்தீப். அப்போதே ரைடில் 9 புள்ளிகளை குவித்து வியப்பை ஏற்படுத்தினார். சீசன் 5-இல் 369 ரைடு புள்ளிகளை பெற்றார். தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஏழாவது சீசன் போட்டியில் 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவேன்
புரோ கபடி போட்டியில் களமிறங்கிய நாள் முதல், இதுவரை எனது பயணம் சிறப்பாக இருந்துள்ளது. மேலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த வேண்டியுள்ளது. இந்த இடத்தை அடைய கடின உழைப்பு தேவைப்பட்டது. கபடி வீரராக, மேலும் சிறப்பாக செயல்பட்டு எனது அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் நிலையான ஆட்டத்தை ஆடுவது முக்கியம்.பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெல்ல வேண்டும். மேலும் 8 ஆட்டங்கள் உள்ள நிலையில், கேப்டனாக எனக்கு பொறுப்புள்ளது. பயிற்சியாளர் மற்றும் ஒவ்வொரு வீரரின் அணுகுமுறை குறித்து அமர்ந்து பேச வேண்டும். ஒவ்வொருவரது உடல்தகுதியையும் பாதுகாத்து, முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம் என்றார் பர்தீப் நர்வால்.
பர்தீப் நர்வாலுக்கு அடுத்து சித்தார்த் தேசாய், நவீன் குமார் மணிந்தர் சிங், ராகுல் செளதரி உள்ளனர்.
மொத்தம் 1023 புள்ளிகளை குவித்துள்ளார் பர்தீப் நர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com