கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி: 47 ஆண்டுகளுக்குப் பிறகு சமனில் முடிந்த ஆஷஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புகைப்படம்: ஐசிசி டிவிட்டர்
புகைப்படம்: ஐசிசி டிவிட்டர்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 294 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, ஜோ டென்லி மற்றும் பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் வலுவான முன்னிலைப் பெற்றது. இதன்மூலம், 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், ஜேக் லீச் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4-வது நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரிலேயே ஆர்ச்சர் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 
இதன்பிறகு களமிறங்கிய ஸ்டுவர்ட் பிராட் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ரன்களை சற்று உயர்த்தினார். இதையடுத்து, லயான் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற லீச் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், 2-வது இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், லயான் 4 விக்கெட்டுகளையும், சிடில், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி கடின இலக்கை நோக்கி களமிறங்கியது. இந்த தொடர் முழுவதும் சொதப்பி வந்த ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள், இந்த இன்னிங்ஸிலும் சொதப்பினர். முதல் விக்கெட்டாக ஹாரிஸ் 9 ரன்களுக்கு பிராட் பந்தில் போல்டானார். அவரைத்தொடர்ந்து, டேவிட் வார்னர் 11 ரன்களுக்கு வழக்கம்போல் பிராட் பந்திலேயே ஆட்டமிழந்தார். 

இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையளித்து வந்த மார்னஸ் லாபுஷானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் இந்த இன்னிங்ஸில் சொதப்பினர். லாபுஷானே 14 ரன்களுக்கும், ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

இந்த ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்களுக்கு குறைவாக ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. ஸ்டீவ் ஸ்மித்தும் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையை இழந்தது. 

இதன்பிறகு, மேத்யூ வேட் சற்று நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் பெயின் ஓரளவுக்கு ஒத்துழைப்பு தந்தனர். இதனால், வேட் அரைசதம் கடந்து நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இருந்தபோதிலும், மார்ஷ் மற்றும் பெயினால் 25 ரன்களைக் கடக்க முடியவில்லை. இதன்பிறகு, டெயிலண்டர்களைக் கொண்டு மேத்யூ வேட் டெஸ்ட் அரங்கில் 4-வது சதத்தை எட்டினார். 

சதம் அடித்த பிறகு, வேட்-இன் தலா 1 ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட, அது அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. ஆனால், அது நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 117 ரன்கள் எடுத்திருந்த வேட் ஜோ ரூட் பந்தில் ஸ்டம்பிங்க் முறையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, லயான் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் ஜேக் லீச்சின் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். 

இதன்மூலம், 263 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் மற்றும் ஜேக் லீச் தலா 4 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி 2-2 என சமன் செய்தது. 1972-க்குப் பிறகு ஆஷஸ் தொடர் சமனில் முடிவது இதுவே முதன்முறையாகும்.

ஆட்டநாயகன்: ஜோஃப்ரா ஆர்ச்சர்

தொடர்நாயகன் (இங்கிலாந்து): பென் ஸ்டோக்ஸ்

தொடர்நாயகன் (ஆஸ்திரேலியா): ஸ்டீவ் ஸ்மித்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com