தீபாவளியின்போது கிரிக்கெட் ஆட்டங்கள் வேண்டாம்: பிசிசிஐ முடிவு

அந்தத் தருணங்களில் நடைபெறும் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைவாக உள்ளதாக...
தீபாவளியின்போது கிரிக்கெட் ஆட்டங்கள் வேண்டாம்: பிசிசிஐ முடிவு

தீபாவளி சமயத்தில் நடைபெற்ற சில ஆட்டங்களை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாது. 2005-ல் இலங்கைக்கு எதிராக தோனி 183 ரன்கள் எடுத்ததும் 2016-ல் நியூஸிலாந்தை அணியைத் திணறடித்த அமித் மிஸ்ராவின் பந்துவீச்சும் கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தீபாவளி விருந்தாக அமைந்தன.

ஆனால் இனிமேல் தீபாவளி சமயத்தில் கிரிக்கெட் ஆட்டங்கள் இடம்பெறாது என்றே தெரிகிறது. அந்தத் தருணங்களில் நடைபெறும் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைவாக உள்ளதாக பிசிசிஐயும் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச ஆட்டங்களை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனமும் கருதுகின்றன. 

இதுதொடர்பாக இரு நிறுவனங்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளன்றோ அல்லது அதற்கு சில நாள்களுக்கு முன்போ இந்திய அணியின் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறக்கூடாது. அச்சமயங்களில் ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை விடவும் குடும்பத்தினரிடையே நேரத்தைச் செலவிடவே விரும்புகிறார்கள். இதனால் தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைகிறது போன்ற காரணங்களினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தீபாவளியன்று ஒளிபரப்பாகும் கிரிக்கெட் ஆட்டத்துக்கு அதிக வரவேற்பு இருந்தால் நிச்சயம் ஸ்டார் நிறுவனம் இதுதொடர்பாக பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்திருக்கும். அதற்கான வாய்ப்புகள் இல்லாததால் தான் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் வீரர்களுக்கும் தீபாவளி சமயத்தில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும் இதனால் உருவாகிறது. 

இக்காரணங்களினால் தான் இந்த உள்ளூர் சீசனில் இந்திய அணி விளையாடும் 5 டெஸ்டுகள், 9 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் ஒன்றுகூட தீபாவளி சமயத்தில் நடைபெறவில்லை. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 அன்று தொடங்கி தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் 23 அன்று நிறைவுபெறுகிறது (தீபாவளி - அக்டோபர் 27). இதன்பிறகு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர், நவம்பர் 3 அன்றுதான் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com