டிஎன்பிஎல் போட்டியில் சூதாட்டமா?: பிசிசிஐ விசாரணை!

சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் எங்களுக்குத் தகவல்கள் தெரிவித்தார்கள். அவர்களை அணுகியவர்கள் குறித்து...
டிஎன்பிஎல் போட்டியில் சூதாட்டமா?: பிசிசிஐ விசாரணை!

கடந்த மாதம் முடிந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களைச் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்த விசாரணையை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. 

டிஎன்பிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் ஓர் இந்திய வீரர், ஐபிஎல் வீரர், ரஞ்சி டிராபி பயிற்சியாளர் ஆகியோர் பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு ஆளாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பணத் தகராறு ஏற்பட்டதால் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. எனவே இது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க  பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் அஜித் சிங் இதுகுறித்துக் கூறியதாவது, சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் எங்களுக்குத் தகவல்கள் தெரிவித்தார்கள். அவர்களை அணுகியவர்கள் குறித்து விசாரணை செய்துவருகிறோம். வாட்சப் மூலமாகக் கோரிக்கை வந்ததால் அதுகுறித்தும் விசாரிக்கிறோம். அணி உரிமையாளர்களிடம் நாங்கள் இதுவரை விசாரணை செய்யவில்லை என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. டிஎன்பிஎல் போட்டிக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் உண்மையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐயிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்றும் டிஎன்சிஏ சார்பில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com