கடைசி ஓவரில் அதிரடி: இந்தியாவுக்கு 150 ரன்கள் இலக்கு

இந்தியாவுடனான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. 
புகைப்படம்: பிசிசிஐ டிவிட்டர்
புகைப்படம்: பிசிசிஐ டிவிட்டர்

இந்தியாவுடனான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் நல்ல தொடக்கத்தைத் தந்தார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹென்ட்ரிக்ஸ் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

இதன்பிறகு, டி காக்குடன் ஜோடி சேர்ந்த பவுமா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இணை தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டி, அதன்பிறகு, அதிரடிக்கு மாறியது. கேப்டன் டி காக்கும் தனது அரைசதத்தை எட்டினார்.

இந்நிலையில், ஆட்டத்தின் முக்கியக் கட்டமான 10 முதல் 15 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. முதலில் அரைசதம் அடித்த டி காக் கோலியின் அட்டகாசமான கேட்ச்சால் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, வான் டர் டஸனும் 1 ரன்னுக்கு ஜடேஜா சுழலில் அவரிடமே கேட்ச் ஆனார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணியின் ரன் வேகம் மீண்டும் சரிந்தது. 

இதையடுத்து, பவுமா 18-வது ஓவரில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரே ஒரு சிக்ஸர் மட்டும் அடித்த மில்லர் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, சைனியின் கடைசி ஓவரில் ஃபெலுவாயோ மற்றும் பிரிடோரியஸ் ஆகியோர் தலா 1 சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைத்தது. 

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணித் தரப்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், சைனி, ஜடேஜா மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com