இரு வீரர்கள் சதம்: முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க ஏ அணி!
By எழில் | Published On : 19th September 2019 05:48 PM | Last Updated : 19th September 2019 05:48 PM | அ+அ அ- |

இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க ஏ வீரர் மார்க்ரம் 161 ரன்களும் முல்டர் 130 ரன்களும் எடுத்துள்ளார்கள்.
மைசூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இந்திய ஏ அணி, 417 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷுப்மன் கில் 92, கருண் நாயர் 78, சஹா 60, ஷிவம் டுபே 68, ஜலஜ் சக்ஸேனா 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் முல்டர், பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 2-ம் நாளின் முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் மார்க்ரம் 83, முல்டர் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள்.
இன்று, தொடக்க வீரரும் கேப்டனுமான மார்க்ரம் அபாரமாக விளையாடி சதமடித்து தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்திய ஏ அணியின் ஸ்கோரை நெருங்க உதவினார்.
161 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் போல்ட் ஆனார் மார்க்ரம். இதன்பிறகு, பின்வரிசை வீரர்களைக் கொண்டு அருமையாக ஆடினார் முல்டர். அவர் சதமடித்ததோடு மட்டுமல்லாமல் 130 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 297 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க ஏ அணி, 109.3 ஓவர்கள் வரை விளையாடி 400 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் நதீம் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
3-ம் நாளின் முடிவில் இந்திய ஏ அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சால் 9, அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 10 விக்கெடுட்கள் மீதமுள்ள நிலையில் 31 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.