தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கின் கீழ் எழுச்சி பெறும் இந்திய கால்பந்து

புதிய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கின் கீழ் இந்திய கால்பந்து அணி எழுச்சியை கண்டு வருகிறது.
தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கின் கீழ் எழுச்சி பெறும் இந்திய கால்பந்து


புதிய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கின் கீழ் இந்திய கால்பந்து அணி எழுச்சியை கண்டு வருகிறது.
இந்தியாவில் தேசிய விளையாட்டாக ஹாக்கி விளங்கி வருகிறது. உலகளவில் கால்பந்து விளையாட்டு அதிகம் பேரால் விரும்பப்படும் விளையாட்டாக உள்ள நிலையில், நமது நாட்டில் கிரிக்கெட்டையே பெரும்பாலானோர் விரும்பிப் பார்க்கின்றனர்.
ஹாக்கியில் 8 ஒலிம்பிக் தங்கம் வென்ற சிறப்புடையது இந்தியா. கடந்த 1938-இலேயே அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1948-இல் சுதந்திர நாடாக முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது இந்தியா.
அதே போல் கடந்த 1950-60 ஆண்டுகளில் கால்பந்திலும் கொடி கட்டி பறந்தது. ஆசிய கண்டத்தில் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி சையத் அப்துல் ரஹீம் பயிற்சியில் 1951, 1962 ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது.
ஒலிம்பிக்கில் 4-ஆவது இடம்: கடந்த 1956 ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 4-ஆவது இடத்தைப் பிடித்தது. ஆசியாவின் உயர்ந்தபட்ச போட்டியான ஏஎப்சி கோப்பை  போட்டிக்கு 4 முறை தகுதி பெற்றுள்ளது. 1964-இல் இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. தெற்காசிய அளவில் சாஃப் கோப்பை கால்பந்து போட்டியில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பிஃபா உலகக் கோப்பை: ஆனால் உலகளவில் பெரிய கால்பந்து திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை போட்டிக்கு ஒருமுறை கூட இந்தியா தகுதி பெறவில்லை. 
ஆசிய அளவில் ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா, ஈரான், இராக், கத்தார், தாய்லாந்து, ஓமன் உள்ளிட்டவை வலுவானவையாக உள்ளன. தகுதிச் சுற்று ஆட்டங்களிலேயே தோல்வி அடையும் நிலையில் பிஃபா போட்டி குறித்து நினைத்து கூட பார்க்க முடியாத நிலை உள்ளது.


1970-2000 மோசமான ஆண்டுகள்: கடந்த 1970 முதல் 2000-ஆம் ஆண்டுகளில் இந்திய கால்பந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. எந்த பெரிய போட்டிகளிலும் முதல் சுற்றைக் கூட கடக்க முடியாமல் திணறி வந்தது. தெற்காசிய அளவில் மட்டுமே தங்கம் பதக்கம் வெல்லும் நிலையில் இருந்தது இந்தியா.
2001-11-இல் மறுமலர்ச்சி: கடந்த 2001-ஆம் ஆண்டில் இந்திய கால்பந்து மீண்டும் மேம்படத் தொடங்கியது. குறிப்பாக கான்ஸ்டான்டைன், பாப் ஹெளட்டன் ஆகியோர் தீவிர பயிற்சியில் மீண்டும் இழந்த மரியாதையை மீட்கத் தொடங்கியது இந்திய அணி. நேரு கோப்பை, ஏஎப்சி சேலஞ்ச் கோப்பை போட்டிகளில் வென்று, மீண்டும் 27 ஆண்டுகள் கழித்து 2011-இல் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா.
இடையில் சில பயிற்சியாளர்கள் வந்து சென்ற நிலையில் கடந்த 2015-இல் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் கான்ஸ்டான்டைன். அவரது பயிற்சியில் 2019 ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது. தாய்லாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இத்தோல்வியால் தனது பதவியை விட்டு விலகினார் கான்ஸ்டான்டைன்.
இகோர் ஸ்டிமாக் நியமனம்: இந்நிலையில் புதிய தலைமைப் பயிற்சியாளராக குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் நியமிக்கப்பட்டார். 
கடந்த 1998-இல் பிஃபா உலகக் கோப்பையில் 3 ஆவது இடம் பெற்ற குரோஷிய அணியில் ஆடியவர் ஸ்டிமாக். மேலும் தனது தேசிய அணியின் பயிற்சியாளராகவும் சிறப்பாக செயல்பட்டார்.
2022 பிஃபா கோப்பை தகுதிச் சுற்று:  அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி புதிய எழுச்சியைக் கண்டுள்ளது. தாய்லாந்தில் நடைபெற்ற இன்டர்கான்டினென்டல் கோப்பை, கிங் கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வியைக் கண்டாலும் புதிய வலிமையை பெற்றது இந்தியா. வழக்கமாக தற்காப்பு ஆட்டமுறையே பின்பற்றி வரும் நமது அணியை தாக்குதல் ஆட்ட முறைக்கு மாற்றினார் ஸ்டிமாக்.
இதனால் சுனில்சேத்ரி உள்ளிட்ட பார்வர்ட்கள் எதிரணிகள் மீது  சரமாரியாக கோல் போடும் முயற்சிகளை மேற்கொள்ள ஏதுவாகியது.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடங்கும் முன்பு 35 வீரர்களை மாற்றி சோதித்து பார்த்தார் இகோர். சர்வதேச கால்பந்தில் தனக்குள்ள அனுபவத்தை முறையாக பயன்படுத்தி வருகிறார். வீரர்களின் உடல்தகுதியை உறுதி செய்தார்.
இதன் பலன் தற்போது வெளிவரத் தொடங்கி உள்ளது. பிஃபா தகுதிச் சுற்றில் பலம் வாய்ந்த ஓமனை ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை கோலடிக்க விடவில்லை. 1-0 என முன்னிலை பெற்றிருந்தாலும், அனுபவமின்மையால் எதிரணி 2 கோல்களை அடிக்க வழிவிட்டனர்.
இந்த தவறுகளின் மூலம் பெற்ற பாடத்தையடுத்து, ஆசிய சாம்பியன் கத்தாருடன் ஆடிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. கடந்த ஜனவரி மாதம் தான் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது கத்தார்.
ஆசிய சாம்பியனுக்கு சவால்: இதற்கு முந்தைய 9 ஆட்டங்களில் கத்தார் 25 கோல்களை எதிரணி மீது அடித்த நிலையில், வலுவான அந்த அணியை கோல் போடவிடாமல் டிரா செய்தது இந்திய அணியின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்திய கோல்கீப்பர் குர்ப்ரீத் இதில் முக்கிய பங்கு வகித்தார்.
இளம் அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இகோர். அவரது பயிற்சியில் வீரர்கள் உடல்தகுதி மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 4-3-3, அல்லது 4-2-3-1 ஆட்ட முறையே வழக்கமானதாகும். ஆனால் அவர் 5-3-2 முறையை பின்பற்றியுள்ளது புதிய அனுபவமாகும். 
இகோர் ஸ்டிமாக் பயிற்சியில் இந்திய கால்பந்து மேலும் எழுச்சியை பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com