சாம்பலில் மீண்டெழுந்த ஃபீனிக்ஸ் பறவை!

இந்த ஆண்டு ஆஷஸ் தொடர், ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி கடந்த 15ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
சாம்பலில் மீண்டெழுந்த ஃபீனிக்ஸ் பறவை!

இந்த ஆண்டு ஆஷஸ் தொடர், ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி கடந்த 15ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தொடரை கடந்த 1882-83ஆம் ஆண்டு முதல் ஒரு சில ஆண்டுகளைத் தவிர்த்து இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மாறி மாறி நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகள் மட்டுமே இந்தத் தொடரில் பங்குபெற்று விளையாடும்.
1882ஆம் ஆண்டில் முதல்முறையாக இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இதையடுத்து, இங்கிலாந்து அணி இறந்துவிட்டதாகவும், அணியின் சாம்பலை ஆஸ்திரேலிய அணி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கிண்டலாகச் செய்தி வெளியிட்டது.
எடுத்துச் செல்லப்பட்ட ஆஷஸை (சாம்பல்) இங்கிலாந்து அணி திரும்பிக் கொண்டுவருமா? என்றும் செய்திகள் பின்னர் வெளிவந்தன. 
அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடர்தான் முதலாவது ஆஷஸ் தொடர் என்ற வர்ணிக்கப்படுகிறது. அந்தத் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஆஷஸை திரும்பிக் கொண்டுவந்து விமர்சனங்களுக்கும், கேலிக்கும் பதிலடி கொடுத்தது வரலாறு!
அப்போது முதல் அதிக கவனத்தைப் பெற்ற இந்தத் தொடர், அதன் பிறகு,  இரு நாட்டு ரசிகர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதுவரை 71 ஆஷஸ் தொடர்கள் நடந்துள்ளன. அதில், ஆஸ்திரேலியா 33 தொடர்களையும், இங்கிலாந்து 32 தொடர்களையும் வென்றுள்ளன.
இந்த ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரையும் சேர்த்து 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளது. 2017-18இல் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆஷஸ் தொடரின் முடிவை இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் எந்த அளவுக்கு மிகத் தீவிரமாகக் கவனிக்கிறார்களோ அதைவிட இந்தத் தொடரை இரு நாட்டு வீரர்களும் கௌரவப் பிரச்னையாகக் கருதி விளையாடுவார்கள்.
நாங்கள் உங்களுக்கு சளைத்தவர்களல்ல என்று இரு நாட்டு வீரர்களும் தீவிர உழைப்பைக் கொட்டி ஆஷஸ் தொடரில் விளையாடுவார்கள். ஆஷஸில் சாதனைக் கொடிகளையும் பறக்க விடுவார்கள்.
இந்த ஆண்டு ஆஷஸில், அதிக கவனத்தைப் பெற்றது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
இங்கிலாந்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து மைக்கேல் கிளார்க் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பு ஸ்மித்துக்கு வந்தது. துணைக் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரை வென்று  தந்து அந்நாட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார் ஸ்மித். ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பையும், வரவேற்பையும் பெற்றார்.
ஆனால், தனக்கு கிடைத்த நற்பெயரை அவரே அடுத்த சில மாதங்களில் கெடுத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது துரதிருஷ்டம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட்டத்தின் முடிவை மாற்றும் நோக்கில் பந்தில் சுரசுரப்பான அட்டையைத் தேய்த்து முறைகேடு செய்ததில் பங்கு பெற்றதற்காக 12 மாதங்கள் விளையாட ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தடை விதித்தது.
 சிறந்த கிரிக்கெட் வீரர், கேப்டனாக 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் 47 வெற்றிகளை அணிக்காகத் தேடித் தந்த ஸ்மித்துக்கு அது சோதனைக் காலம்.
தடைக் காலம் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் ஸ்மித்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் நாக்-அவுட் சுற்றுகளில் 50க்கும் அதிகமான ரன்களை 4 முறை மேல் எடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். (முதலாவது வீரர் சச்சின் டெண்டுல்கர்)


4 அரை சதங்களுடன் அந்தத் தொடரில் 379 ரன்களை எடுத்து, நற்பெயரை மீண்டும் சம்பாதிக்கத் தொடங்கினார். டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து, ஆஷஸ் தொடரில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி டெஸ்டில் தாம் அதிரடி வீரர் என்பதை நிரூபித்துக் காட்டினார் ஸ்மித்.
முதலாவது டெஸ்டில் 2 இன்னிங்ஸிலும் சதங்களை பதிவு செய்து அணியின் வெற்றிக்கு வித்திட்டதுடன், 2ஆவது டெஸ்டில் 92 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 92 கி.மீ. வேகத்தில் வீசிய பந்து, ஸ்மித்தின் தலையைப் பதம் பார்த்தது. நிலைகுலைந்து ஆடுகளத்திலேயே சரிந்து விழுந்தார் ஸ்மித். 
2ஆவது டெஸ்ட் டிரா ஆனது. 3ஆவது டெஸ்டிலும் அவரால் விளையாட முடியவில்லை. அவர் இல்லாத அந்த ஆட்டத்தில் ஆஸி. தோல்வியைத் தழுவியது.
காயத்திலிருந்து மீண்டுவந்து 4ஆவது டெஸ்டில் இரட்டை சதம் பதிவு செய்து அனைவரின் புருவத்தையும் உயர வைத்தார் ஸ்மித்.
அதே ஆட்டத்தின் 2ஆவது இன்னிங்ஸில் அரை சதம் என அதிரடி காண்பித்தார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாதான் வெற்றி கண்டது.
வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஆட்டத்திலும், இரு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தமாக 103 ரன்களை எடுத்திருந்தார் ஸ்மித்.
இவ்வாறாக, தாம் விளையாடிய 4 ஆட்டங்களிலும் 2 சதம், ஒரு இரட்டை சதம், 3 அரை சதம் உள்பட மொத்தம் 774 ரன்களைக் குவித்தார் ஸ்மித். 68 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 26 சதங்களையும், 27 அரை சதங்களையும் பதிவு செய்துள்ள அவர், 937 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார்.
21ஆவது நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்தார். 
கடந்த 1976ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற 4 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 829 ரன்களைக் குவித்து மே.இ.தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்தச் சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 3ஆவது டெஸ்டிலும் விளையாடியிருந்தால் இந்தச் சாதனையையும் முறியடித்திருப்பார் ஸ்மித்.
ஆஷஸைப் பொறுத்தவரை 2015-2019 காலகட்டத்தில் 15 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ஸ்மித் 1604 ரன்களை (7 சதம், 5 அரை சதம்) குவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன், ஆஷஸ் தொடரில் 15 இன்னிங்ஸில் 1673 ரன்களை (8 சதம், 2 அரை சதம்) குவித்து முதலிடத்தில் உள்ளார்.
தன் மீது கோபத்தில் இருந்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க ஆஷஸில் (சாம்பல்) ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்துள்ளார் ஸ்மித் என்றால் அது மிகையல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com