யோ யோ தேர்வில் தோற்று விடுவேன் என நினைத்தார்கள்: வெடித்த யுவ்ராஜ் சிங்!

ஆனால், இந்திய கிரிக்கெட்டில் இது நடப்பதில்லை. எப்போதும் இப்படித்தான் என்று கூறியுள்ளார்...
யோ யோ தேர்வில் தோற்று விடுவேன் என நினைத்தார்கள்: வெடித்த யுவ்ராஜ் சிங்!

கடந்த 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா வெல்ல பிரதான காரணமாக இருந்தவர் யுவ்ராஜ். ஆல்ரவுண்டரான அவர், புற்றுநோய் பாதிப்பால் அண்மைக்காலமாக சரிவர ஆடவில்லை. ஐபிஎல் போட்டியிலும் சோபிக்கவில்லை. இதனால் இந்திய அணியில் இவருக்கான வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த ஜூன் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட யுவ்ராஜ் சிங், தன்னுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:

அப்போது நான் காயமடைந்தேன். இலங்கை தொடருக்காகத் தயாராகும்படி எனக்குச் சொல்லப்பட்டது. திடீரென யோ யோ தேர்வில் நான் பங்குபெற வேண்டும் எனக் கூறப்பட்டது. என்னைத் தேர்வு செய்யும் விதத்தில் இது தலைகீழானது. அந்த 36 வயதில் நான் மீண்டும் பயிற்சி எடுத்து யோ யோ தேர்வுக்குத் தயாராக வேண்டியிருந்தது. ஆனால் யோ யோ தேர்வில் நான் வென்றபிறகும், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி என்னை நிரூபிக்கவேண்டும் என்று கூறப்பட்டது. என்னுடைய வயது காரணமாக யோ யோ தேர்வில் நான் வெற்றி பெற மாட்டேன் என அவர்கள் நினைத்துள்ளார்கள். அதனால் என்னை வெளியேற்றுவது சுலபமாக இருக்கலாம். சாக்குப்போக்குச் சொல்வதற்காக அப்படி என்னிடம் சொல்லப்பட்டது. 

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடிய 8-9 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பிறகும் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். 15-17 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரரிடம் அமர்ந்து நிலைமையைப் பேசும் சூழல் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. என்னிடமோ, சேவாக், ஜாகீர் கானிடமோ யாரும் பேசவில்லை. இந்தக் காரணத்துக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என இதற்கான பொறுப்பில் இருக்கிறவர், எங்களைப் போன்ற வீரர்களிடம் அமர்ந்து பேசியிருக்கவேண்டும். இது வருத்தத்தை அளிக்கும் என்றாலும் நேர்மையாக நடந்துகொண்டதற்காக முடிவை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்திய கிரிக்கெட்டில் இது நடப்பதில்லை. எப்போதும் இப்படித்தான் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com