எனக்கும், 17-க்கும் ஏதோ தொடர்பு உள்ளது: மனம் திறக்கும் ரஹானே!

தனக்கும், 17-க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் அஜின்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
ரஹானே (கோப்புப்படம்)
ரஹானே (கோப்புப்படம்)


தனக்கும், 17-க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் அஜின்க்யா ரஹானே தெரிவித்துள்ளார். 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், அஜின்க்யா ரஹானே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்த சதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் தெரிவிக்கையில், 

"ஒவ்வொரு தொடரில் இருந்தும், ஒவ்வொரு ஆட்டத்தில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். எனது முதல் டெஸ்ட் ஆட்டத்துக்காக நான் 2 ஆண்டுகள், 17 டெஸ்ட் ஆட்டங்கள் காத்திருந்தேன். தற்போது இந்த சதத்துக்காகவும் 17 டெஸ்ட் ஆட்டங்கள் காத்திருந்தேன். இரண்டுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் ஹாம்ஷைர் அணிக்காக விளையாடியபோது, எனது முதல் டெஸ்ட் ஆட்டத்துக்கு முன் எனது மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். இந்த 17 டெஸ்ட்களில் நான், சதம் அடிக்கவில்லை. அதனால், நான் சதத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னால் அதை அடிக்க முடியவில்லை. 

அதனால் மேற்கிந்தியத் தீவுகளில் எனது சிந்தனை ஓட்டம் ஒரு முறைகூட சதம் அடிக்க வேண்டும் என்று இல்லை. எது நடக்க வேண்டுமோ அது நடக்கும், சதம் அடிக்க வேண்டும் என்றால் அடிப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

வெளியில் இருந்து பார்க்கும்போது இது எளிதாக இருக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது திறமை மீது நான் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். விளையாட்டின் நுட்பங்கள் குறித்து எதுவும் சிந்திக்கவில்லை. கடினமான சூழலைக் கையாள, மனரீதியாக என்னை எப்படி தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் அனைத்துமாக இருந்தது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட், வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் என இந்தியாவில் மொத்தம் 5 ஆட்டங்கள் உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் எந்தவொரு அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முன்பும் எந்தவொரு அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது புள்ளிகள் முறை கடைபிடிக்கப்படவுள்ளதால் அனைத்து ஆட்டங்களுமே முக்கியமானது. 

புள்ளிகள் நடைமுறையில், ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கும் ஆட்டத்தை டிரா செய்வதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. உள்ளூரில் நடைபெறும் ஆட்டங்களில் வெற்றி பெற்று, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது புள்ளிகள் பெற்றிருப்பதால் அது சாதகமாக இருக்கும்.

எய்டன் மார்கிரம் மற்றும் தெம்பா பவுமா ஆகியோர் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினர். பாப் டூ பிளெசிஸ் அனுபவ வீரராக அணியில் இருக்கிறார். அதனால், அவர்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. 

சூழ்நிலைகளைப் பொறுத்து விளையாடும் அணி குறித்து நாங்கள் முடிவு செய்வோம். ஹனுமா விஹாரி சுழற்பந்து வீச்சாளராகவும் இருப்பது அணியில் நல்ல வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் விளையாடும் போது அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்ப்பது மிகவும் கடினம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com