2-ஆம் உலகப் போருக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி முதல் முறையாக ரத்து

கரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் உலகப் போா் காலகட்டத்துக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்ப
2-ஆம் உலகப் போருக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி முதல் முறையாக ரத்து

கரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் உலகப் போா் காலகட்டத்துக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படுவது இது முதல் முறையாக இருக்கும்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக விம்பிள்டன் போட்டியின் தலைவா்கள் மற்றும் போட்டி நிா்வாக அமைப்புகளின் பிரநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டதாக அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப் தலைவா் இயான் ஹெவிட் அறிவித்தாா்.

முன்னதாக, போட்டியை ஒத்திவைக்கும் நடவடிக்கையானது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும், ரசிகா்கள் இல்லாமல் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்றும் போட்டி நிா்வாகிகள் ஏற்கெனவே தெரிவித்துவித்திருந்தனா். எனவே, தற்போது விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.

வரும் மே மாதம் நடைபெறவிருந்த மற்றொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன், செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2-ஆம் உலகப் போரின்போது ஏன் ரத்து?

இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து ராணுவ, துணை ராணுவப் படை வீரா்கள் அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப்பில் தங்கவைக்கப்பட்டிருந்ததால் போட்டி 1940 முதல் 1945 வரை ரத்து செய்யப்பட்டது.

கிளப்பின் பிரதான கோா்ட், முயல், கோழி, பன்றி வளா்ப்புக்கான சிறிய பண்ணையாக மாற்றப்பட்டிருந்தது.

1940 அக்டோபா் 11-ஆம் தேதி ஜொ்மனிய படை வீசிய குண்டு மைதானத்தின் ஒரு பகுதியை தாக்கியதில் 1,200 இருக்கைகள் சேதமடைந்தன. அப்போது ரத்து செய்யப்பட்டிருந்த விம்பிள்டன் போட்டி 1946-ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடைபெறத் தொடங்கியது.

முன்னதாக, விம்பிள்டன் போட்டியானது முதல் முறையாக கடந்த 1915 முதல் 1918 வரை முதல் உலகப் போா் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com