சைவ உணவுக்கு மாறியது என் வாழ்க்கையின் சிறந்த முடிவு: விராட் கோலி குதூகலம்

சைவ உணவுப் பழக்கத்துக்கு நான் ஏன் முன்பே மாறவில்லை என நினைக்கிறேன்..
சைவ உணவுக்கு மாறியது என் வாழ்க்கையின் சிறந்த முடிவு: விராட் கோலி குதூகலம்

எத்தனை பேருக்குத் தெரியும்? விராட் கோலி, சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்.

2017 வரை அசைவத்தை உண்டு வந்த கோலி, 2018-லிருந்து திடீரென சைவ உணவுக்கு மாறிவிட்டார்.

இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சனுடன் இன்ஸ்டகிராமில் உரையாடியபோது இதற்கு விளக்கம் அளித்தார் கோலி. அவர் கூறியதாவது:

2018க்கு முன்பு நான் அசைவ உணவுகளை உண்டு வந்தேன். இங்கிலாந்துக்கு வந்தபோது (2018), டெஸ்ட் தொடருக்கு முன்பு நான் அசைவ உணவைக் கைவிட்டுவிட்டேன்.  

2018-ல் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, செஞ்சுரியன் டெஸ்டில் கழுத்து எலும்பில் காயம் ஏற்பட்டது. இதனால் வலி ஏற்பட்டு ஓர் இரவு முழுக்கத் தூங்காமல் இருந்தேன். பிறகு பரிசோதனைகள் செய்து பார்த்தேன். என் உடல் யூரிக் அமிலத்தை அதிகமாக உற்பத்தி செய்தது. என் உடலும் அமிலத்தன்மையுடன் இருந்தது. கால்சியம், மாக்னீசியம் எல்லாம் எடுத்தும் ஒரு மாத்திரையால் என் உடலால் சரியாக இயங்க முடியவில்லை. எனவே என் எலும்பிலிருந்து கால்சியத்தை உடல் எடுத்துக்கொண்டது. என் எலும்புகள் பலவீனமாகின. அதனால் தான் எனக்குச் சிக்கல் ஏற்பட்டது. பிறகு, இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின் பாதியில் அசைவம் உண்பதை நிறுத்தினேன். இதனால் யூரிக் அமிலம் சுரப்பதை நிறுத்த முடிந்தது. உடலின் அமிலத்தன்மையையும் குறைக்க முடிந்தது.

இதற்குப் பிறகு என் வாழ்க்கையில் இதுபோல முன்பு உணர்ந்ததில்லை. அபாரம். சைவத்துக்கு மாறி இரண்டு வருடங்களாகிவிட்டன. என் வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு இது. காலையில் எழும்போது இப்போது போல முன்பு புத்துணர்ச்சியாக உணர்ந்ததில்லை. ஓர் ஆட்டத்தின் சோர்விலிருந்து விரைவாக மீள முடிகிறது. ஒரு வாரத்துக்கு தீவிரமான மூன்று ஆட்டங்களில் விளையாடினாலும் என்னால் 120 சதவீதம் உற்சாகமாக விளையாடமுடியும். ஒரு டெஸ்ட் ஆட்டம் ஆடிமுடித்தால் ஒருநாளில் மீண்டுவிடமுடியும். உடனே அடுத்த டெஸ்ட் ஆடமுடியும்.

அசைவம் உண்பதை விடவும் இப்போது நல்லவிதமாக உணர்கிறேன். சைவ உணவுப் பழக்கத்துக்கு நான் ஏன் முன்பே மாறவில்லை என நினைக்கிறேன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பே சைவத்துக்கு மாறியிருக்க வேண்டும். எல்லாவறையும் மாற்றிவிட்டது. உடல் லேசாகிவிட்டது, நேர்மறை எண்ணங்களுடனும் அதிக சக்தியுடனும் உள்ளேன். அபாரமான மாற்றம் இது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com