முகப்பு விளையாட்டு செய்திகள்
வயது மோசடி: பிசிசிஐ எச்சரிக்கை
By DIN | Published On : 03rd August 2020 01:57 PM | Last Updated : 03rd August 2020 01:57 PM | அ+அ அ- |

வயது மோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரு வருடத் தடை விதிக்கப்படும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை (யு-19) இந்திய அணி வென்றது. இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சதமடித்த மன்ஜோத் கல்ரா, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். ஆனால் வயதைத் தவறாகக் குறிப்பிட்ட குற்றச்சாட்டில் அவர் சிக்கியுள்ளார் கல்ரா. ரஞ்சிப் போட்டியில் விளையாட அவருக்கு ஒரு வருடம் தடை விதித்துள்ளது தில்லி கிரிக்கெட் சங்கம். மேலும் இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 2 வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. யு-16, யு-19 போட்டிகளில் விளையாடியபோது வயதைத் தவறாகக் குறிப்பிட்டதால் கல்ராவுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்த ஒரு வீரராவது வயது மோசடியில் ஈடுபட்டால் 2 வருடத் தடை விதிக்கப்படும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது. மோசடியில் ஈடுபடும் வீரர்களால் தடைக்குப் பிறகு எந்தவொரு இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபெற முடியாது என்றும் அறிவித்துள்ளது.
மேலும் தானாக முன்வந்து வயது மோசடியைத் தெரிவிக்கும் வீரர்களுக்குத் தண்டனை அளிக்கப்படாது. பிறந்த தேதி குறித்த சரியான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்தால் அவர்களுக்குரிய இளையோர் கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வயது மோசடி என்பது தீவிரமான பிரச்னை. வயது மோசடியால் பல வீரர்கள் நல்ல வாய்ப்புகளை இழக்கிறார்கள். இதுகுறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவுள்ளதால் வயது மோசடியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தானாக முன்வந்து தங்கள் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
வயது மோசடி குறித்த தகவல்களை அளிக்க 9820556566 & 9136694499 என்கிற தொலைப்பேசி எண்களைப் பயன்படுத்தலாம் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.