இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதும் டெஸ்ட் தொடர்: நாளை தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதும் டெஸ்ட் தொடர்: நாளை தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் இருந்தது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த டெஸ்டை 269 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியது. 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த பிராட், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிராடும் சேஸும் அவரவர் அணியின் தொடர் நாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். 

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3-வது டெஸ்டில் இடம்பெற்ற அதே இங்கிலாந்து அணி முதல் டெஸ்டுக்கும் தேர்வாகியுள்ளது. இதனால் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கவுள்ளார்கள். பாகிஸ்தான் அணி இரு சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு விளையாடத் திட்டமிட்டுள்ளது.

கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்டுக்கான பாகிஸ்தான் அணி: 

அசார் அலி (கேப்டன்), பாபர் அசாம், அபித் அலி, அசாத் சஃபிக், ஃபாவத் அலாம், இமாம் உல் அஹ், கஷிப் பட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, சதாப் கான், ஷாகீன் அப்ரிடி, ஷான் மசூத், சொஹைல் கான், யாசிர் ஷா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com