என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது: ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்

எந்தவொரு வீரரும் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது.
என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது: ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்

ஐபிஎல் போட்டியின்போது ஒவ்வொரு அணியினரும் கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.

இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக கடந்த ஞாயிறு அன்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் அணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு அணிக்கும் பிசிசிஐ அனுப்பியுள்ளது. அதில் உள்ள முக்கியமான அம்சங்கள்:

* ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் முன்பு அனைத்து வீரர்களும் இரு முறை கரோனா பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 

* இந்தியாவில் கரோனா தொற்று உறுதியாகும் வீரர்கள் இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இரு பரிசோதனைகளில் கரோனா இல்லை என்று உறுதியான பிறகே ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல வேண்டும்.

* விளம்பரப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் வீரர்கள், பத்து நாள்கள் கழித்து தான் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவேண்டும்.

* ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றவுடன் மற்றொரு கரோனா பரிசோதனை அனைவருக்கும் மேற்கொள்ளப்படும். 

* அங்குச் சென்றபிறகு அனைத்து வீரர்களும் 7 நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஏழு நாள்களிலும் ஒவ்வொரு வீரருக்கும் மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் கரோனா இல்லை என்பது உறுதியானால் பிறகு பயிற்சியைத் தொடங்கலாம். 

* போட்டி முடிவடையும் வரை ஐந்து நாள்கள் இடைவெளியில் ஒவ்வொரு வீரருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

* வெளிநாட்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் வீரர்கள், கரோனா தொற்று இல்லை என்கிற சான்றிதழுடன் வரவேண்டும். 

* போட்டி நடுவில் எந்தவொரு வீரராவது கரோனாவால் பாதிக்கப்பட்டால் அவரைத் தனி அறையில் தனிமைப்படுத்த வேண்டும். 

* எந்தவொரு வீரரும் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. விடுதிக்கு வெளியே அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

* அனைத்து எட்டு அணிகளும் தனித்தனி நட்சத்திர விடுதிகளில் தங்கவேண்டும். ஹோட்டலோ ரிசார்டோ வெளி ஆள்கள் யாரும் நுழையாதபடி இருக்கவேண்டும். அது சாத்தியமில்லை என்றால் வெளியே செல்வதற்கு, உள்ளே நுழைவதற்கு என தனி வழியை அமைத்துக்கொள்ள வேண்டும்.

* வீரர்களுடன் குடும்பத்தினரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரலாம். ஆனால் அவர்கள் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. வீரர்களுடன் அவர்கள் பயணிக்கக் கூடாது, ஓய்வறைக்கு அவர்கள் வரக்கூடாது என்று பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com