விவோவுக்குப் பதிலாக அடுத்த ஐபிஎல் விளம்பரதாரர் யார்?: பிசிசிஐ அறிக்கை

அதிகமான தொகையை வழங்கும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்பது கட்டாயமில்லை...
விவோவுக்குப் பதிலாக அடுத்த ஐபிஎல் விளம்பரதாரர் யார்?: பிசிசிஐ அறிக்கை

விவோ சீன நிறுவனம், ஐபிஎல் ஒப்பந்தத்தை ரத்து செய்த அடுத்த ஒரு வாரத்தில் புதிய விளம்பரதாரரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ.

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் மாதம் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் ஐபிஎல் விளம்பரதாரராக சீன நிறுவனமான விவோ தொடரும் என பிசிசிஐ அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. 

இதையடுத்து ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐயும் விவோ நிறுவனமும் தங்களுடைய கூட்டணியை ரத்து செய்வதாக அறிவித்தன.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான புதிய விளம்பரதாரரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

* ஐபிஎல்-லின் புதிய விளம்பரதாரருக்கான விண்ணப்பத்தை அனுப்பும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ. 300 கோடிக்கும் குறைவாக இருக்கக்கூடாது.

* அதிகமான தொகையை வழங்கும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்பது கட்டாயமில்லை. பல அம்சங்களையும் பரிசீலித்த பிறகே நிறுவனத்தை பிசிசிஐ தேர்வு செய்யும். 

* விளம்பரதாரருக்கான ஒப்பந்தக் கால அளவு - ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே

* ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். நான்கு நாள் கழித்து விளம்பரதாரரின் தேர்வு குறித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வருட ஐபிஎல்-லின் விளம்பரதாரருக்கான போட்டியில் அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம், டிரீம் 11 எனப் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளன. தற்போது இப்போட்டியில் பதஞ்சலி நிறுவனமும் இணைந்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே. திஜாராவாலா ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்த வருட ஐபிஎல் விளம்பரதாரருக்கான போட்டியில் பதஞ்சலி நிறுவனமும் உள்ளது. இதன்மூலம் பதஞ்சலி பிராண்டை உலகளவில் பிரபலப்படுத்த முடியும். பிசிசிஐயிடம் எங்கள் கோரிக்கையை விரைவில் தெரிவிப்போம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com