ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணி: ஆர்ச்சர் ஆதங்கம்

எந்தவொரு சவாலுக்கும் அவர் அஞ்சமாட்டார்... 
ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணி: ஆர்ச்சர் ஆதங்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் ஸ்டோக்ஸ் விளையாடாதது மிகப் பெரிய இழப்பு என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட், வியாழன் அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காக நியூசிலாந்து செல்ல வேண்டியிருப்பதால் கடைசி இரு டெஸ்டுகளில் இருந்து ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். 

இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் கூறியதாவது:

பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் பணியை நாங்கள் முடிக்க வேண்டியுள்ளது. பந்து வீசாமல், பேட்டிங் செய்யாமல் அவர் இருந்தாலும் அவர் எங்களுடன் இருக்க வேண்டும் என நினைப்போம். ஆடுகளத்தில் அவர் என்ன செய்வார் என்பதைக் காட்டிலும் ஓய்வறையில் அவருடைய தாக்கம் அதிகமாக இருக்கும். 

மான்செஸ்டரில் நான் தனிமைப்படுத்தப்பட்டபோது ஜோ ரூட்டைப் போல அவரும் தினமும் என் அறைக்கு வந்து, நான் நலமுடன் இருக்கிறேனா என விசாரிப்பார். தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்காக மிகவும் அக்கறைப்படுவார். 

சவால்களை எதிர்கொள்ளும்போது உங்கள் அருகில் ஸ்டோக்ஸ் இருக்க வேண்டும் என நினைப்பீர்கள். எந்தவொரு சவாலுக்கும் அவர் அஞ்சமாட்டார். அதேசமயம் அவருக்குக் குடும்பமும் முக்கியம். அதனால் அவர் நியூசிலாந்தில் தற்போது உள்ளார். இதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவருக்கு இந்த நேரத்தில் ஆதரவை அளிப்போம். விரைவில் எல்லாம் சரியாகி, அவர் அணிக்குத் திரும்புவார் எனக் காத்திருக்கிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com