ஐபிஎல் போட்டியின் முதல் வாரத்தில் இந்த வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்!

மும்பை அணிக்கு மட்டும் பாதிப்பில்லை. அந்த அணியில் இடம்பெற்ற...
ஐபிஎல் போட்டியின் முதல் வாரத்தில் இந்த வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களால் ஐபிஎல் போட்டியின் முதல் வாரத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

இந்நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடர்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4, 6, 8 தேதிகளில் செளதாம்ப்டனில் டி20 தொடரும் செப்டம்பர் 11, 13, 16 தேதிகளில் மான்செஸ்டரில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடர் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்பதற்காக 21 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார்கள். அவர்களின் விவரம்:

ஆரோன் ஃபிஞ்ச், ஜோஷ் பிலிப், கேன் ரிச்சர்ட்சன் (பெங்களூர்), பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் (ஹைதராபாத்), ஸ்டீவ் ஸ்மித், ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான்), கிளென் மேக்ஸ்வெல் (பஞ்சாப்), அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டாய்னிஸ் (தில்லி) ஜோஷ் ஹேஸில்வுட் (சென்னை).

ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைகிறது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் வீரர்கள் கட்டாயமாக ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது. இதனால் 12 ஆஸ்திரேலிய வீரர்களால் ஐபிஎல் போட்டியின் முதல் வாரத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடரால் மும்பை அணிக்கு மட்டும் பாதிப்பில்லை. அந்த அணியில் இடம்பெற்ற நாதன் கோல்டர் நைல், கிறிஸ் லின் ஆகிய இரு ஆஸ்திரேலிய வீரர்களும் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குத் தேர்வாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com