3-வது ஒருநாள்: பாண்டியா, ஜடேஜா அதிரடியால் 302 ரன்களைக் குவித்த இந்திய அணி

இருவரும் கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
12,000 ஒருநாள் ரன்களை விரைவாக எடுத்த விராட் கோலி
12,000 ஒருநாள் ரன்களை விரைவாக எடுத்த விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களைக் குவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கேன்பராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இதன்மூலம் தமிழக வீரரான நடராஜன், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவனும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். தவன், 16 ரன்களில் அபாட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸரும் 3 பவுண்டரிகளும் அடித்த ஷுப்மன் கில், 33 ரன்களில் அகர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இன்று 23 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 300 ஒருநாள் இன்னிங்ஸில் (309-வது ஒருநாள் ஆட்டம்) 12,000 ரன்களை விரைவாக எடுத்து சாதனை செய்திருந்தார். அதை கோலி இன்று முறியடித்துள்ளார். 12,000 ரன்களைக் கடக்க கோலிக்கு 242 இன்னிங்ஸ் (251-வது ஒருநாள் ஆட்டம்) மட்டுமே தேவைப்பட்டுள்ளது.

ஷ்ரேயஸ் ஐயரும் 21 பந்துகளில் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த கே.எல். ராகுல் 5 ரன்களுடன் அகர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதனால் கோலியின் ரன்கள் எடுக்கும் வேகம் குறைந்தது. 64 பந்துகளில் அரை சதமெடுத்த கோலி, பிறகு 78 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

2020-ம் வருடம் ஒரு ஒருநாள் சதமும் கோலியால் எடுக்க முடியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான 2008-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இந்த ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளார் கோலி. இந்த வருடம் கரோனா காரணமாக 9 ஒருநாள் ஆட்டங்கள் மட்டும் விளையாடியுள்ள கோலி, 431 ரன்கள் எடுத்துள்ளார். 5 அரை சதங்கள். பேட்டிங் சராசரி - 47.88.

32-வது ஓவரின் முடிவில் கோலி ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பாண்டியாவும் ஜடேஜாவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் நிதானமாக ரன்கள் எடுத்த இருவரும் கடைசி 5 ஓவர்களில் தங்களுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 45-வது ஓவரின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர், 226 ஆக இருந்தது. ஆனால் இருவரும் கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 பந்துகளில் இருவரும் 150 ரன்கள் சேர்த்துள்ளார்கள். பாண்டியா 76 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்களும் ஜடேஜா 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் எடுத்தார்கள்.

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களைக் குவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com