தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா: இந்திய அணிக்காக விளையாடிய நடராஜனுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து
By DIN | Published On : 03rd December 2020 11:08 AM | Last Updated : 03rd December 2020 11:11 AM | அ+அ அ- |

படம் - twitter.com/Natarajan_91
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு சுருண்டது. இந்திய வீரர் பாண்டியா ஆட்டநாயகன் ஆனார்.
இந்த ஆட்டத்தின் மூலம் தமிழக வீரர் டி. நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்து முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார் நடராஜன்.
இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் நடராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
அருமையான முயற்சி பிரதர். ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமாகி, நன்றாக விளையாடினீர்கள். இந்திய அணி உடையில் உங்களைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று எழுதியுள்ளார்.