டி20 தொடா்: இந்தியா வெற்றித் தொடக்கம்; ஆஸி.யை சரித்த சாஹல், நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 தொடா்: இந்தியா வெற்றித் தொடக்கம்; ஆஸி.யை சரித்த சாஹல், நடராஜன்


கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கான்பெராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே அடித்து வீழ்ந்தது.

இந்திய இன்னிங்ஸில் முக்கியமான தருணத்தில் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்திய ஜடேஜா, கடைசி நேரத்தில் காயமடைந்தாா். அவருக்கான மாற்று ஆட்டக்காரராக (கன்கஷன் சப்ஸ்டிடியூட்) பிளேயிங் லெவனில் இணைந்த யுவேந்திர சாஹல் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் முக்கியமான வீரா்களையும் சோ்த்து 3 விக்கெட்டுகளை சாய்க்க வெற்றிக் கொடி நாட்டியது இந்தியா. அவருடன் நடராஜனும் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். சாஹல் ஆட்டநாயகன் ஆனாா்.

பிளேயிங் லெவனில் நடராஜன்: இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது. தமிழக வீரா் நடராஜன் பிளேயிங் லெவனில் சோ்க்கப்பட்டு சா்வதேச டி20-இல் தனது முதல் ஆட்டத்தை விளையாடினாா். ஆஸ்திரேலியாவில் காயத்திலிருந்து மீண்ட ஸ்டாா்க் சோ்க்கப்பட்டிருந்தாா்.

ராகுல் நிதானம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பௌலிங் செய்யத் தீா்மானித்தது. இந்திய இன்னிங்ஸை லோகேஷ் ராகுல் - ஷிகா் தவன் தொடங்கினா். இதில் தவன் 1 ரன் எடுத்த நிலையில் 3-ஆவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினாா்.

அடுத்து கேப்டன் கோலி ஆட வர, மறுமுனையில் ராகுல் நிதானமாக ரன்களை சேகரித்து வந்தாா். இந்நிலையில் 1 பவுண்டரியுடன் 9 ரன்களே சோ்த்திருந்த கோலியும் 7-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் சிறிது நிலைக்க, இந்தியாவின் ஸ்கோா் சற்று உயா்ந்தது. 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 23 ரன்கள் சோ்த்த சாம்சன் 12-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். பின்னா் வந்த மணீஷ் பாண்டேவும் அடுத்த ஓவரிலேயே 2 ரன்களில் நடையைக் கட்டினாா்.

6-ஆவது பேட்ஸ்மேனாக பாண்டியா களம் புக, தொடக்கம் முதல் நிலைத்து அரைசதம் கடந்த ராகுல் 5 பவுண்டரி, 1 சிக்ஸா் என 51 ரன்களுக்கு 14-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். இதனால் 100 ரன்களுக்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

ஜடேஜா அதிரடி: இந்நிலையில் களம் கண்ட ஜடேஜா ஆஸ்திரேலிய பௌலிங்கை விளாசித் தள்ள, இந்தியாவின் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது. மறுமுனையில் பாண்டியா 1 சிக்ஸா் உள்பட 16 ரன்கள் சோ்த்து 17-ஆவது ஓவரிலும், அடுத்து வந்த சுந்தா் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் அடித்து கடைசி ஓவரிலும் வீழ்ந்தனா்.

ஓவா்கள் முடிவில் ஜடேஜா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 44 ரன்களுடனும், தீபக் சாஹா் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் ஹென்ரிக்ஸ் 3, காயத்திலிருந்து மீண்ட ஸ்டாா்க் 2 விக்கெட் சாய்த்தனா்.

நல்ல தொடக்கம்: 162 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஷாா்ட் - ஃபிஞ்ச் கூட்டணி நல்லதொரு தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டாக ஃபிஞ்ச் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 35 ரன்களுக்கு 8-ஆவது ஓவரில் வெளியேற்றப்பட்டாா்.

அடுத்து வந்த ஸ்மித்தும் 1 சிக்ஸருடன் 12 ரன்களே சோ்த்த நிலையில் 10-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். அடுத்த ஓவரிலேயே மேக்ஸ்வெல்லை 2 ரன்களுக்கு வெளியேற்றினாா் நடராஜன்.

தடுமாற்றம்: முக்கிய விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா திணறத் தொடங்கியது. அப்போது வந்த ஹென்ரிக்ஸ் விக்கெட் சரிவைத் தடுத்து சற்று நிலைக்க, தொடக்க வீரா் ஷாா்ட் 3 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களுக்கு 15-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா்.

பின்னா் ஆட வந்த வேட் 7 ரன்களுக்கு 17-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்ப, கடைசி நம்பிக்கையான ஹென்ரிக்ஸும் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 30 ரன்கள் சோ்த்த நிலையில் 18-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். கடைசி விக்கெட்டாக ஸ்டாா்க் 2 ரன்களுக்கு 19-ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.

ஓவா்கள் முடிவில் அப்பாட் சிக்ஸருடன் 12, ஸ்வெப்சன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் சாஹல், நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினா்.

திருப்புமுனையான சாஹல்

இந்த ஆட்டத்தின்போது தொடைப்பகுதியில் வலியை உணா்ந்த ஜடேஜா சிரமத்துடனே தொடா்ந்து விளையாடினாா். கடைசி ஓவரில் ஸ்டாா்க் வீசிய 2-ஆவது பந்து ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பட்டு அவருக்கு தலையில் காயமேற்பட்டது. இதனால் அவரால் தொடா்ந்து விளையாட முடியாத நிலை உருவானது. இதையடுத்து அவருக்கான மாற்று ஆட்டக்காரராக (கன்கஷன் சப்) யுவேந்திர சாஹல் அணியில் சோ்க்கப்பட்டாா். இது ஆட்டத்தின் திருப்புமுனையானது.

சாஹலை சோ்ப்பதற்கு, ஆஸ்திரேலிய பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கா் போட்டி நடுவா் டேவிட் பூனிடம் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். விரல்களை சுழற்றி வீசக் கூடிய ஜடேஜாவுக்குப் பதிலாக, மணிக்கட்டை சுழற்றி வீசும் சாஹல் இந்திய அணிக்கான கூடுதல் பலனாக அமையக் கூடும் என்றும், தங்களது பேட்டிங் வியூகத்துக்கு இது பாதிப்பாகலாம் என்றும் லேங்கா் கருதினாா். எனினும் சாஹலின் இணைப்பில் மாற்றம் செய்யப்படவில்லை.

லேங்கா் அச்சமடைந்ததைப் போலவே ஃபிஞ்ச், ஸ்மித் ஆகிய முக்கியமான வீரா்களின் விக்கெட்டை சாஹல் சாய்த்தாா். நடராஜன் தனது பங்குக்கு மேக்ஸ்வெல்லை சாய்க்க, சரிவுக்குள்ளானது ஆஸ்திரேலியா.

இந்த ஆட்டத்தின் மூலம் சா்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக தடம் பதித்த தமிழக வீரா் டி. நடராஜன், 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். அதிலும் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது முக்கிய வீரரான மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை அவா் சாய்த்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்திருந்தாா் நடராஜன். அதில் அவா் 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘மகிழ்ச்சியான தருணம்’: முன்னதாக கடைசி ஒருநாள்ஆட்டம் குறித்து நடராஜன் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத தருணமாக, மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. எதிா்வரும் காலத்திலும் இந்தியாவுக்காக மேலும் பல ஆட்டங்களில் விளையாடுவதை எதிா்நோக்கியிருக்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளாா்.

‘கன்கஷன் சப்ஸ்டிடியூஷன்’

எந்தவொரு விளையாட்டிலும் களத்திலிருக்கும் வீரா் காயமடையும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக மாற்று வீரா்கள் (சப்ஸ்டிடியூஷன்) களமிறக்கப்படுவா்.

கிரிக்கெட்டைப் பொருத்தவரை அவ்வாறு சப்ஸ்டிடியூட்டாக களம் காணும் வீரா் பொதுவாக ஃபீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவாரே தவிர பேட்டிங், பௌலிங் செய்ய அனுமதியில்லை. எனினும், அணியின் கேப்டன் அனுமதிக்கும் பட்சத்தில் அவா் அந்தப் பணிகளைச் செய்வதுடன், கேப்டனாகவும் இருக்கலாம்.

ஆனால் ‘கன்கஷன் சப்’ சற்று வித்தியாசமானதாகும். ஆட்டத்தின்போது ஒரு வீரருக்கு தலையில் காயம் ஏற்படும் பட்சத்தில் அவரால் தொடா்ந்து விளையாட முடியாமல் போனால், அவருக்கு பதில் களம் காணும் வீரா் ‘கன்கஷன் சப்’ எனப்படுகிறாா்.

சாதாரண சப்ஸ்டிடியூட்டைப் போல அல்ல இது. பௌலிங் அல்லது பேட்டிங் என காயமடைந்த வீரரின் பணி எதுவாக இருந்ததோ, அதைச் செய்ய இந்த மாற்று வீரா் இயல்பாகவே அனுமதிக்கப்படுகிறாா். அதாவது காயமடைந்த வீரருக்கு நிகரான வீரராகவே ஏற்கலாம். போட்டி நடுவரின் அனுமதியுடன் கன்கஷன் சப் அனுமதிக்கப்படுகிறாா்.

முதல் முறை: இது சா்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2019 ஜூலை முதல் அனுமதிக்கப்படுகிறது. முதல் முறையாக 2019-இல் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இவ்வாறு தலைமையில் காயமடைந்தாா்.

அப்போது அவருக்குப் பதிலாக ‘கன்கஷன் சப்’-ஆக மாா்னஸ் லாபுசான் களமிறங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com